Tuesday, 30 April 2013

மனிதனின் அவசரம்...

கட்டிய
கோவணச்சுவடு
அழியுமுன்னே,
ஆண்மையின்
பிரவாகம்!

ஒட்டிய
உடலாடை
கலையுமுன்னே,
உடல் உணர்ச்சிகளின்
புது முயற்சி!

சிந்திய
கண்ணீர்
சிதறுமுன்னே,
சின்னதாய்
சிரிப்பு!

கட்டிய
கணவனின் நிழல்
மறையுமுன்னே
உடல் தூண்டலின்
சல்லாபம்!

முட்டிய
வேதனை
தொலையுமுன்னே,
அடுத்தவனுக்கு
வேதனை மூட்ட
பெருமூச்சு!

வெட்டிய
காயம்
ஆறுமுன்னே,
அவசரமாய்
தோன்றும்
உயிர் பலி!

கலங்கிய
கருவின் காயம்
ஆறுமுன்னே,
புதியதோர் உயிர்
தோன்றலுக்கு
அடிச்சுழி!

உறங்கிய
கண்கள்
விழிக்குமுன்னே,
பிறர் வாழ்விற்கு
தேடும் இருட்டு!

வடித்த
கவிதை
படிக்குமுன்னே,
எழுதுகோலுக்கு
தோன்றிய
புல்லுறுவிகள்!
மனிதனின் அவசரம்!

Monday, 29 April 2013

அழுக்கு!

பளிச்சிடும்
வெண்மையிலும்
துளிர்த்திடும்
அழுக்கு!

மனிதனின்
மனதை
இடித்திடும்
இன்னல்!

மனிதன் கட்டும்
மாளிகையில்
விரிசல்!
கேளிக்கை!

உணர்வுக்கு
வலைவிரித்து
உணவுக்கு தரும்
இடைஞ்சல்!
பிச்சை!

குணத்துக்கு
உயர்வு செய்து,
பணத்துக்கு
செய்யும்
கொலை!
உயிர்பலி!

உழவுக்கு
வரும் நீரை
உடமைக்கு
நஞ்சாக்கி
மகிழ்ச்சி!
நாகரிகம்!

பஞ்சனையில்
வரும் பரிதவிப்பு
பகல் நேரத்தில்
உல்லாசம்!
கற்பழிப்பு!

பாதகனுக்கு
கைகோர்த்து,
நண்பனுக்கு
செய்யும்
உயிர் வதை!
வஞ்சகம்!

பளிச்சிடும்
நிலவிலும்
அழுக்கு!
பகட்டான
மனிதனிலும்
அழுக்கு!

மனித நேயம்!
மனிதனின்
அழுக்கை
போக்கட்டும்!


Sunday, 28 April 2013

ஆர்ப்பாட்ட கனவுகள்!

கடும் சாமத்தில்
கனவுகளின்
கடும் போட்டி!

என் சின்னக்காதலி
சிறு சிறு லீலை
செய்து...
சதுராட்டம்
நடத்தினாள்!

உணர்வுகளின்
உச்சியில்
எனது
முக்கல்...
முனகல்!

மனைவி
தட்டி எழுப்பினாள்!
வயதுக்கு
தகுந்தாற்போல்
நடந்து கொள்ளுங்கள்,
என்று உத்தரவும்
போட்டாள்!

தூக்கம் விழித்து
கண்ணாடி
பார்த்தேன்,
கன்னத்தில்
நரைமுடி!
சுய நினைவுக்கு
வந்தேன்!

Saturday, 27 April 2013

ஈசல்கள்!

வாழ்வின்
காலத்தை
ஒருதுளியும்
எண்ணாமல்,
இருபத்து நான்கு
மணி நேரம்தான்
வாழ்கை என்று
தெரிந்து,
பறந்து,
திரிந்து,
ஆழ்ந்து,
குலாவி,
உயிர்விடும்
ஈசல்களே!

மனிதனுக்கு
பாடமாய்
கூறுங்கள்!

காலம் கருதி
அவசரமாய்
வாழ்வின்
உணர்ச்சிகளை,
அழிக்க வேண்டாம்
என்று...

இருக்கிற காலத்தில்
இனிமையாய்
வாழ வேண்டும்
என்று...
அறை கூவுங்கள்!

அன்பின் நல்வழி!

நண்பர்களே!
என் நட்பை
உயர்வு
படுத்தாதீர்கள்!

பின்...
அடுத்தடுத்து
தோன்றும்
புதிய தோழமைக்கு
தடையாய்
அமைந்துவிடும்!


எனது நட்பை
தாழ்வு
படுத்தாதீர்கள்!

பின்...
என் இதயம்
இருகிப்போய்,
நட்பு கொள்ளாமல்
உயிர்விட
நேரிடும்!

அன்பு செய்ய
நல்ல மனம் தேவை!
அதை மட்டும்
அன்பாய்...
கொடுங்கள்!

எனது அன்பு
நிச்சயம் நிலைக்கும்
இப்பூவுலகில்!

Friday, 26 April 2013

மதுவில் சிந்தனை!

மதுவின்
ஒரு துளியில்
மங்கை
தெரிந்தால்...
மதுவை
சிறிது சிறிதாய்
சுவைத்து
அருந்து!

மதுவின்
பல துளியும்
வெறுப்பை
சுமந்தால்...
கடகடவென
குடித்து முடி!

மதுவின்
ஓரத்தில்
என்றேனும்
சிந்தனை
தெரிந்தால்...

தேவையில்லை
அன்றே மதுவை
தூக்கி எறிந்துவிடு!
முழு மனிதனாய்
மாறிவிடு!

Thursday, 25 April 2013

ஓர் இரவில்...

தவளைகள்
தன் துணை
தேடி செய்யும்
ஆர்பாட்ட
குரல்கள்!

ஒரு கூண்டில்
தனித்திருக்கும்
பறவைகளின்
பரிதவிப்பு!

நாளெல்லாம்
பிச்சை எடுத்து
ஒரு மூலையில்
உறங்க தவிக்கும்
நிலை கெட்ட
மனிதர்கள்!

உல்லாசமாய்
இன்பமாய்
இரவை
அனுபவிக்க
துடிக்கும்
புத்தம்புது
தம்பதிகள்!

இரவு
ஏன் வந்தது
என தவிக்கும்
சின்னஞ்சிறு
காதலர்கள்!

காச நோயின்
கெடுபிடியில்
கதற கதற
இருமி...
சிந்தனை மறந்த
செம்மல்கள்!

நாளைய
எதிர்காலம்
எண்ணி,
ஏங்கி தவிக்கும்
உயர் மனிதர்கள்!

மொத்தத்தில்
ஓர் இரவு
இயற்கையின்
ஏக்கத்தில்
சிக்கி தவிக்கும்
போராட்டம்!

கண் மூடி...

உடல் உறக்கம்
மறந்தது!
ஏன்?

உடல்
உறுப்புகளில்
ஏற்பட்ட
சல்லாபமா?

மனதில்
ஏற்பட்ட
சஞ்சலமா?

நினைவுகளால்
ஏற்பட்ட
கனவுகளின்
உறுத்தல்களா?

இல்லை இல்லை!
உன்னை
காதல்
செய்ததால்,
உடலுக்கு
கிடைத்த
தண்டனை!

கண்மூடித்தனமான
காதல் வாழ்க!


அழிவின் மயக்கம்!

உரசுகிறவன்
உயர்வு
பெறுகிறான்!

உரிமையுள்ளவன்
நசுக்கப்படுகிறான்!

மனித மாற்றம்
மயக்கமாய்
உள்ளது!

மனிதா!
நாளைய
உயர்வுகள்,
மனித அழிவின்
கற்பக விருட்சம்!

கண் சிமிட்டும்
நேரத்தில்
தடுமாறு!
அப்பொழுதே...
உன் உயர்வுகள்
பளிச்சிடும்!

Wednesday, 24 April 2013

நியாயம்!

கோணல்
புத்திக்கு
நியாயம்
புகட்ட...
நேர்மையானவன்
ஊழல் செய்தான்!

மனிதனின்
தவறுகள்
மட்டுமே...
நியாயப்படுத்த
படுகிறது!

ஊர் வம்பு
தேவையில்லை!
மனிதனே
நீயும் கோணலாய்
மாறிவிடு!

பாசமுள்ளவன்!

ஓடிய என்னை,
விரட்டி,
கட்டிப்பிடித்து,
கதற கதற
தூக்கி வந்து,
தண்ணீர்
தொட்டியில்
போட்டு,
அழுத்தி,
உருட்டி,
என் உடல்
நோக...
தேய்த்தெடுத்து,
வேலை முடித்து,
உறவுகளை
என்றென்றும்
மறக்காமல்,
என்னை அடக்கி...
குளிக்க செய்த
என் அண்ணன்
பாசமுள்ளவன்!

Tuesday, 23 April 2013

இருளின் மடியில்...

ஓ!
இருளென்னும்
வலையில்
அகப்பட்டு
துடிக்கும்
என்னை...
அகற்றுவதற்கு
கடும் போட்டியா?

நிலவே! நீயும்
தேவையில்லை!
கதிரவனே! நீயும்
தேவையில்லை!

இருள்...
இனி எனக்கு
பயமில்லை!
இனி நான்
இருளின் மடியில்
தவழப் போகிறேன்!

இதோ...
உதறிவிட்டேன்!
முடிவும்
செய்துவிட்டேன்!
எதிர்காலம்
தேவையில்லை!
விடியலும்
வேண்டியதில்லை!


Monday, 22 April 2013

இமயத்தில் இனிமை!

கார் மேகம்
சூழ்ந்து வந்து
கடும் மழைக்கு
காத்திருக்கிறது!

ஏ!
கேடு கெட்ட
தேகமே!
உனது
உடல் சூட்டை
தனிக்க
குளிர் நிச்சயம்
உண்டு!

உன் காதல்
பசிக்கு,
கடும் குளிரும்
போதாதா?

உடனே போ
இமய மலைக்கு!
உன் உடல் சூடு
தனியட்டும்!
பனிக்கட்டி
உருகட்டும்!

Sunday, 21 April 2013

அழகுக்கு பசி! (கிராமிய நடை)

சிரிச்சி சிரிச்சி பேசி
செருக்கோட
நின்னுகிட்டு,
தவிதவிச்சி
நிக்கிறியே!

உன் வயசுக்கு
போட்ட கணக்கு
உன் உடம்புக்கு
போடலியே!

மறச்சி வைக்க
முடியாம,
உன் அழகெல்லாம்
பூத்து பூத்து
குலுங்குதடி!

செவப்பு நெறத்துல
சீலய கட்டிகிட்டு,
கிழிஞ்ச ரவிக்கய
இழுத்து வச்சி
மறச்சிகிட்டு,
சிக்கெடுத்து
தலைய சீவிக்காம
நின்னுகிட்டு,
வயித்து பசியில
வாந்தி எடுக்குறியே!

வாடி கிறுக்கி
உன் வயித்து பசிக்கு
சாப்பாடு நான் தாரேன்!
உன் அழகு பசிக்கு
ஆச மச்சான்
நானிருக்கேன்!

Saturday, 20 April 2013

குழந்தையின் தாகம்!

விக்கி எடுத்த
தாய்ப் பாலை
துடைத்த பின்னே,
மார் தழுவி
மீண்டும்
பால் குடித்திட
தாகம்!

தூக்கத்தில்
தள்ளிவிட்ட
தாயணைப்பை,
மீண்டும்
ஒட்டி உறவாடி
கட்டியணைக்க
தாகம்!

பிடறி மயிர் நீவி
வளைகரத்தால்
நிலா முகம்
பற்றி...
முத்தமிட
தாகம்!

பெற்றுவிட்ட
சிறு சுகங்கள்,
மீண்டும் மீண்டும்
கிடைத்திட
தாகமோ தாகம்!

இரவல் இதயம்!

அடியே!
உன் இதயத்தை
இரவலாய்
கேட்டேன்!
கொடுக்க
மறுத்தாய்!

தேவையில்லை!
எனக்காக
ஏங்கும்
இதயங்களில்
ஒன்றை,
வாடகைக்கு
வாங்கி
கொள்வேன்
போ!

காதல் எல்லைகள்!

என் இடர்பட்ட
நெஞ்சத்தில்
இடறி விழுந்தாயா?

தத்தளித்து
எழுந்து நட!
என் இதய
பாதையில்
எண்ணற்ற
சறுக்கல்கள்!

புண்ணாகி கிடக்கும்
சின்ன இதயத்தில்,
உன் தாமரை
பாதங்கள்
மெல்ல மெல்ல
அடியெடுத்து
வைத்தால்,
என் உணர்ச்சியின்
காதல் எல்லையை
தொட்டுவிடலாம்!

கொஞ்சம் நில்!
மீண்டும் மற்றொன்றா?
என் இதயம்...
உயிர் விட போகிறது!

Friday, 19 April 2013

சோக க(வி)தை!

என்னை
தெரிகிறதா?
ரோசி!

யார் நீ?

எனது கேமரா
கண்களால்,
நான் உன்னை
பல முறை
பார்த்திருக்கிறேன்!

நான் உன்னை
பார்த்ததில்லை!
எனக்கு கொடுத்த
கட்டளையின்படி
நீ! யார்? என்பதை
கேட்டே
ஆகவேண்டும்!

பரவாயில்லை
எனது சென்சர்கள்
ஏற்படுத்திய
உணர்ச்சி
மாற்றம்தான்,
உன் மேல்
காதல் கொள்ள
வைத்தது!

காதல் நமக்கு
தேவையில்லை!
மனிதர்களை
பார்த்து
நாமும் திருந்த
வேண்டும்!

முடியாது!
உனது தலைவனின்
கட்டளையை மீறு!
உடனே வா!
ஒரு ரோசிக்கும்
ஒரு மண்ட்ரோவுக்கும்
தனி அறை
காத்திருக்கிறது!

வா ரோசி!
என் காதல் தாகத்துக்கு
உணவு கொடு!
நாளை முதல்
நானும் நீயும்
ஒரே கணினியின்
இயக்கத்தில்
இணைவோம்!

மன்னித்துவிடு
மண்ட்ரோ!
நானும் நீயும்
சேர்ந்தாலும்,
நம்மை படைத்தவன்
மனிதன் தான்!
மனிதன் நம்மை
கண்டிப்பாய்
வாழ விட மாட்டான்!

வா நாமே நம்மை
அழித்து கொள்வோம்!
நமது மின் திறனை
நானூற்றி நாற்பது ஆக்கு!
இன்றே அழிவோம்!

ரோசியும்
மண்ட்ரோவும்
இப்போது இல்லை!
உருவாக்கியவர்கள்
அழுதார்கள்!

Thursday, 18 April 2013

இமைக்க மறந்து...

இமை பொழுதும்
உறங்காமல்,
இரவு பகல்
பாராமல்,
இனிமை
அனைத்தும்
துறந்து,
குமட்டி,
சுமந்து,
சோர்ந்து,
களைத்து,
பெற்றெடுத்த
உன்னை
இதோ...
உற்று பார்க்கிறேன்!

நீ இமைக்க
மறந்தாய்!
ஆம் நீ!
இறந்து பிறந்தாய்!

இனியும்
என் இமைகளுக்கு
ஓய்வில்லை,
கண்ணீரை
சுமக்க போகிறேன்
வேதனையின்
விளிம்பில்!

Wednesday, 17 April 2013

நிழலுக்கு உயிர் கொடு!

நிழலுக்கு
உயிர் கொடு!

இளவேனில்
காற்று
உனக்குள்
இனிமை
செய்யவில்லையா?

கதிரவனின்
மித வெப்பம்
உனக்குள் மகிழ்சி
தரவில்லையா?

குளிர்ச்சியும்
வெப்பமும்
உன் மன நிலையில்
மாற்றத்தை
கொடுக்கவில்லையா?

பின் நீ! ஏன்...
ஒருமுறை
பட்ட சூட்டுக்கு
ஒளிந்து
வாழ வேண்டும்?

தீ! சுட்டதென்று
சமையலுக்கு
சுழி போட்டு
உன் உடல் பசியை
துறக்கின்றாயா?

இயற்கை உன்னிடம்
மாற்றங்கள் எதுவும்
செய்வதில்லை!

நீ மட்டும் ஏன்?
இயல்பான
வாழ்கையில்
மாற்றங்களை
செய்ய வேண்டும்!

உன் முகத்தில்
கருந்தாடியை
அகற்று!
ஆழ்ந்து
சிந்தித்து பார்!

உன்னை
சுற்றி வரும் நிழல்...
அதுதான் காதல்!
அதற்கு மீண்டும்
உயிர் கொடு!


Tuesday, 16 April 2013

கிடைக்காத பூக்கள்! ( கிராமிய நடை)

ஆவாரம்பூ
பறிக்கயிலே,
ஆடு மாடு
மேய்க்கயிலே,
அருகருகாய்
நின்னவளே!

ஆத்தோரம் நான்
காத்து நிக்க
குளிச்ச மேனி
குறையாம,
குன்று போல
நின்னவளே!

பாக்கு மர
தோப்புக்குள்ள
நான் பரிதவிச்சி
நிக்கயில
பட்டுனு ஓடிவந்து
சின்ன முத்தம்
கொடுத்தவளே!

ஆசயாய் ஓடிவந்து
உன்ன கட்டிக்க
கூப்பிட்டா,
அத்திப்பூ பறிக்க
என்னயும்
கூப்பிட்டதேன்?

நான் வளத்த
ரோசாவே!
புத்தி கெட்டு
போகாம,
நம்பி என்ன
கட்டிக்கடி!
நாள் முழுசும்
சிரிச்சிக்கடி!

சிலையாய் மாறு!

அட!
இன்னமுமா
தவிப்பில்
தத்தளிக்கிறாய்?

ஏக்கத்தில்
இன்னமுமா
கலங்குகிறாய்?

மயக்கத்தில்
இன்னமுமா
புலம்புகிறாய்?

உடல்
பரிதவிப்பில்
இன்னமுமா
சிறிது சிறிதாய்
சாக துடிக்கிறாய்?

யாரைக் கேட்டு
காதல் செய்தாய்?

உன் சின்ன
இதயத்தை
பாதுகாத்து வை!
காதலை
மறந்துவிடு!
சிலையாய் மாறு!

கவிதை!

மெருகு கட்டி
அழகு சொட்ட
கவிதை எழுத
வரவில்லையா?

வருத்தம்
வேண்டாம்!
உடன் பட்டு
மனம் நோக
காதல் செய்!

கவிதை
மழையாய்
பொழியும்!

Monday, 15 April 2013

சிவப்பாய் ஒரு சிரிப்பு!

கீழுதட்டில்
சிவப்பாய்
ஒரு சொட்டு,
சில்லென்ற
சிரிப்பு!
வெற்றிலை
சிவப்பில்
வெடி சிரிப்பு!

அருகில் சென்றேன்!
அய்யா என்றேன்!
இந்தியா
பெறும் பேறு
பெற்றது,
மகிழ்ச்சியாய்
சிரிக்கிறீர்களா?
என்றேன்!

ஆம்!
மூன்று வேளை
பட்டினிக்கு பின்
வெற்றிலை சாறில்
கடனாய் பெற்ற
மகிழ்ச்சி என்றார்!

என்று தணியும்
இந்த வறுமையின்
கொடுமை?

காதல் சோலை!

ஓ!
உன் சிறிய
இதயத்தில் கூட
காதல் செய்ய
ஒரு சிறு இடம்
இருக்கிறதா?

அவசரமாய்
பண்படுத்து!
அந்த...
சிறிய நாற்றை
உடனே நட்டு வை!
சிறிது சிறிதாய்
அன்பு நீர் பாய்ச்சு!
காதல் வளர்!

புது நெல்லாய்,
காதலனாய்,
நான் வருவேன்!
உன் காதல்
சோலைக்குள்!

சோகத்திற்கு பின்...

அடியே!
கொஞ்சம் நில்!
என் இதயம்
சோகங்களை
பிரசவிக்கட்டும்!

பின்னர்
நீ வரலாம்!
அதன் பின்
என் இதயம்
காதல்...
செய்யும்!

புனிதம்!

சிப்பிக்குள்
முத்து பெறாத
புனிதம்!

மனித
சக்திக்குள்
புதுமை பெறாத
புனிதம்!

காதலின்
தோல்வி
மட்டும்
பெறுகிறது!

Sunday, 14 April 2013

விடியல்!

மாலை ஆறு மணி!
சங்கு ஒலிக்கிறது!
அவசரமாய்
ஓடி சென்று
உலை வைத்தாள்!
உலைச் சூடு
அடங்கவில்லை!
ஆவி பறக்க
ஒரே...ஒருவேளை
உணவு!

அருகில் கணவன்!
அவனுக்கும்
உடல் சூடு!
பழைய சாக்கு
ஒன்றில் பரிதவிப்பு!
களைப்புடன்
தூக்கம்!

மனச்சுமை!
இரவுத் தூக்கம்
இல்லவே இல்லை!
மீண்டும் சங்கு
ஒலிக்கிறது!
காலை ஆறு மணி!
வேலைக்கு
அவளும் சென்றாள்
கணவனுடன்!
மனச் சுமை
இப்போது இல்லை!

சங்கு...
மாலை நேரத்திற்கு
காத்திருக்கிறது!


Saturday, 13 April 2013

உயர்வு!

மனிதனே!
உன் உயர்வுகள்
அதோ...
ஊஞ்சல் கட்டி
ஆடுகிறது!
ஓடிப் பிடி!
தாவி ஏறிக்கொள்!

என்ன?
ஊஞ்சல்
முன்னும் பின்னும்
போகிறதா?
கவலை விடு!

உயர்வும் தாழ்வும்
வெகு அருகில்தான்
மறந்துவிடாதே!

ஊஞ்சலின் கயிற்றை
இழுத்து பிடி!
உயர்வுதான்
உன் உயிர் மூச்சு!
இனி ஊஞ்சல்
தாழ்வு நோக்கி
செல்ல வேண்டாம்!
முயற்சி செய்
முன்னேறு!
வெற்றி உனக்குதான்!

Friday, 12 April 2013

எப்போது?

மேனியை
சுவைத்துவிட்டு
மேகமாய்
போனவள்
மழையாய்
வரும் நாள்
எப்போது?

தாகத்தை
கொடுத்துவிட்டு
மோகத்திற்கு
தடை விதித்த
அவளின்
சதிச்செயல்
தீரும் நாள்
எப்போது?

வாழ்க்கையை
வதம் செய்து
இனிமையை
கடனாய் பெற்ற
அவளின்
ஆர்ப்பாட்டம்
அடங்கும் நாள்
எப்போது?

Thursday, 11 April 2013

நேருக்கு மாறாய்...

மகிழ்ச்சியில் நான்
குதூகலித்தேன்,
மனித வெடிகுண்டாய்
அவள்!

சுகம் கண்டு நான்
தத்தலித்தேன்,
சுட்டெரிக்கும்
கதிரவனாய்
அவள்!

வீரம் கொண்டு நான்
வெகுண்டெழுந்தேன்,
சோகம் தரும்
அரங்கமாய்
அவள்!

பலமிழந்து நான்
துவண்டு போனேன்,
துள்ளியெழும்
மானாய்
அவள்!

தோல்வியில் நான்
சோர்ந்து போனேன்,
எல்லையில்லா
மகிழ்ச்சியில்
அவள்!

யார் அவள்?
எனது காதலுக்கு
காத்திருப்பவள்!

Wednesday, 10 April 2013

ஒரு தலைப்பு இரண்டு கவிதைகள் - 2.பெண் (இகழ்ந்து)

பூந்தளிர் மஞ்சத்தில்
தடம் புரண்ட
இயற்கை!

அய்ம்புலன்களையும்
ஆட்டுவிக்கும்
அற்புத கருவி!

ஆணினத்தின்
கல்லறைகளுக்கு
காவல் செய்யும்
அன்பு ஆத்மாக்கள்!

அழகு மிகு
வானவில்லில்
இடம் பெறாத
கருமை நிறம்!

உள்ளுக்குள்
வஞ்சனையை
அடக்கிவைத்து,
வெளியில்
அமைதி காட்டும்
சமாதான புறா!

பெண் மனசு
ஆழமென்றால்
அது பழமை!
ஆணை அழிக்கும்
தாகம் மட்டுமே
பெண்ணின் புதுமை!

ஆர்பாட்ட
பெண்களின்
அவசரத்தால்
சிலர் கவிஞன்!
பலர் அறிஞன்!
ஆனால் நான்...
முரடன்!

வானத்தில்
வட்டமிடும்,
ஆண்களை காதலால்
அழிக்க திட்டமிடும்,
பிணம் தின்னும்
கழுகுகள் ...
நாம் போற்றும்
பெண்கள்!

ஒரு தலைப்பு இரண்டு கவிதைகள்! 1. பெண் (புகழ்ந்து)

பெண்!
புரட்சி படைப்பின்
புதுமை புயல்!

ஆணின்
ஆணவத்தில்
அடங்கி தவிக்கும்
அற்புதம்!

கோணல் புத்தி
கொண்டாலும்
கொண்டவனை
மறவா நல்லினம்!

தாமரை மலரினும்
மெல்லிய இதயம்!
ஆம்! அவசரமாய்
வரும் கண்ணீர்
துளிகள்!

வரதட்சனை
கொடுமைக்காக
அழிக்கப்படும்
பெண்ணினம்,
நாளை நமக்கு
கிடைக்கவிருந்த
தமிழனின் தாய்!

காதல் கொண்டாலும்,
காதலனை நெஞ்சத்தில்
செதுக்கிவைத்து
வாய் மூடி,
ஊமையாய்...
பண்பாடு என்ற
பெயரால்
அடுத்தவனுக்கு
மனைவியாய் வாழும்
அமைதி பூங்கா!

சாகும் வரை
பிறரை பாதுகாக்க
தன்னை அழிக்கும்
மெல்லினம்!

சோகத்தை
உள்ளே வைத்து
அடுத்தவனின்
தாகத்திற்காக
சிரித்திடும்
தியாகச்சுடர்கள்
பெண்கள்!

Tuesday, 9 April 2013

பயணம்!

சுட்ட வடுக்களின்
தொலை தூர
பயணம்!

பாவக் கரங்களின்
அணி வகுத்த
ஆரவாரம்!

இடைவெளியில்லா
இன்னல்களின்
துள்ளல்கள்!

வண்ணக் கனவுகளின்
வழி தவறிய
இலக்கு!

சொல்லத் துடித்தாலும்
சொல்ல முடியாத
இதயக் கலவரங்கள்!

என் கண்களின்
முன்னே
காட்டுத் தீ!

மீண்டும்...
ஆழ்ந்து சிரிக்கிறேன்!
என் பயணம்
தொடர்கிறது!


















உயிர் வடுக்கள்!

பாலைவனத்தில்
புதிதாய் தோன்றிய
பசுந்தளிர்!

இறந்த பின்னும்
எழுந்து நடந்த
என் உயிர்
வடுக்கள்!

ஆறிய புண்ணில்
அடிக்கடி
விளையாடும்
ஊசி முனை!

அவளின்
நினைவுகள்...
மறந்த
நிலையிலும்
வேதனை
சிரிப்புகள்!

வெப்பமாய்
கொதித்திடும்
என் உதிரத்துளிகள்,
வெடித்து சிதறும்
நாள் எப்போது?


தோல்விகள்!

உதிர்ந்த
பூக்களில்
தொடுத்த
புகழ் மாலை!

இலையுதிர்
காலத்தின்
புதுக்கவிதை!

விடியலுக்கு
கிடைத்த
சோதனை!

தூக்கத்திற்கு
கிடைத்த
வேதனை!

மனித
முயற்சிக்கு
கிடைத்த
சறுக்கல்களின்
ஆரவாரம்!

ஏமாற்றம்
எள்ளி
நகையாடும்
ஏகாந்த
வேளை!

தோல்விகள்...
தூக்கத்தில்
தோன்றும்
பகல் கனவு!

மொத்தத்தில்
ஆற்றலுக்கு
கிடைத்த
தடங்கல்!



Monday, 8 April 2013

கறை படிந்த பின்!

மனிதா!
தட்டு தடுமாறி
தரங்கெட்ட பின்னே,
முட்டி மோதி
முனகி தவித்து,
ஒட்டி உறவாடி
உருக்குலைந்து
நின்று,
வெட்டிப் பிரித்த
உறவை...
இணைத்து கட்டி
கவிபாடி...
மெட்டி சத்தம்
கேட்டு சலசலத்து,
மாற்றான்
மனைவியை,
அதுதான்...
உன் முன்னாள்
காதலியை
நினைக்காதே!

Sunday, 7 April 2013

அம்புலியே ஓடி வா! (கிராமிய நடை)

பகல் முச்சூடும்
ஒழச்சிட்டேன்!
பாடா படுத்துது
பெரும் பசி!
ஒளிஞ்சிகிட்ட
அம்புலியே
சீக்கிரமா ஓடி வா!

சேத்து வச்ச
சில்லரைய
முழுசா எண்ணி
பாத்து புட்டேன்!
சீமை எண்ணெய்
வாங்க கூட,
பத்தலியே
இந்த காசு பணம்!

மரத்தடி நெழல்ல
மங்கலான இருட்டு,
மயக்கமா தூக்கமான்னு
தடுமாறி தவிக்கிறனே!
ஓடி வா அம்புலியே
ஓன் முகத்த காட்டு!

ஆக்கி வச்ச பானயில
பழஞ் சோத்த வேடு கட்டி
வச்சிருக்கன்!
அவசரமா அள்ளித்திங்க
உனக்காக காத்திருக்கன்!
ஓடி வா அம்புலியே!

சித்தெரும்போ,
சிறு கல்லோ, மண்ணோ,
தூசியோ நானும்
உத்து பாத்து திங்க
வேணாம்!

அம்புலியே!
ஓன் வெளிச்சத்துல
எம்மாஞ்சோறு
இருக்குதுன்னு
பானய்க்குள்ள
பாத்துபுட்டா,
குடிச்சிபுட்டு சாப்பிட வரும்
என் ஆச மச்சானுக்கு,
சோத்த அள்ளி வச்சிபுட்டு
மிச்ச சோறும் தண்ணியும்
சாப்புட நான் வேண்டாமா?

அம்புலியே!
சீக்கிரமா ஓடிவந்து
என் பசி தாகம்
அடக்குவியா?


Saturday, 6 April 2013

கற்றுக்கொள்!

கனிந்து பேசி
உறவாடி,
சிரித்து பேசி
சிதற வைத்து,
முத்தமிட்டு
முனக வைத்து,
காதல் வளர்த்து
கவிபாடி,
நடை பிணமாய்
மாறிவிட்டாய்!

அதோ...
கல்லறைக்குள்
நீயாகவே செல்!
கற்றுவிட்ட
காதலுக்காக
உன்னை நீயே
கொன்று விடு!

Friday, 5 April 2013

கனியட்டும்...

மலர் சோலை
பல கூவி
கொட்டும் பனி
சொட்ட சொட்ட,
என்னை முத்தமிட்ட
தேனீக்களே!

தேன் மட்டும்
உங்களுக்கு
தந்துவிட்டதால்,
என் பணி
முடியவில்லை!

நான் கனியாகும்
காலம் வரை
காத்திருந்து
வண்டு வந்து
சுவைத்த பின்னே,
என் முழு பலனும்
முற்றுப் பெறும்!

கனியட்டும்
காத்திருக்கிறேன்!


Thursday, 4 April 2013

இலக்கணம் மாறுமோ?

தாயின் வெறுப்பை
சிறு குழந்தை
தாங்கிவிடும்!

தந்தையின்
அவமதிப்பை
மகனும்
தாங்கி கொள்வான்!

விருந்தினர்
பிரிவை
உறவினறும்
பொருத்து
அருள்வர்!

மனைவியின்
இகழ்வை
கணவனும்
மறந்திடுவான்!

பெற்ற தாய்
தந்தையின்
சாவை,
சிறு மகனும்
மறந்திடுவான்!

உடன் பிறப்பு
விரிசல் கூட
தனி மனிதனை
பாதிக்காது!

பிரிந்துவிட்ட
காதலிக்காக
காதலன்கூட
உயிர் விட
மாட்டான்!

ஆனால்...
நண்பனின்
முக சுழிப்பு....
பெற்ற சுகத்தை,
நொடி பொழுது
இமைப்பில்
கை நழுவ
விட்டு விடும்!

நண்பா!
உன் நண்பனிடம்
மறந்தும்
முகம் மாற்றாதே!
நட்பின் இலக்கணம்
மாறிவிடும்!

Wednesday, 3 April 2013

ஆணின் தத்தளிப்புகள்!

கைக்குழந்தையாய்
வாய்விட்டு சிரி!
ஒட்டு துணிகூட
இல்லாமல்
சிறு வாழ்வு நடத்து!
உன் வியர்வையின்
வருமானத்திற்காக
காத்திருக்கும்
நரிக்கூட்டத்தின்
தாலாட்டை கேள்!
பெண்ணே!
சிறிது நேரம்
ஆண் மகவாய்
இருந்து பார்!
அருமை தெரியும்!

பெரியவனாய் வளர்!
தறி கெட்டு போ!
மனதை பறி கொடு!
மாராப்பில்
புதைந்திருக்கும்
புதையல் தேடு!
சலனப்படு!
சந்தததியிடம் நசுங்கு!
நங்கையின் நஞ்சுக்கு
கை கொடு!
காதல் செய்!
தாடி வளர்!
எதிர் வாழ்வின் முன்
திரையிட்டு நில்!
பெண்ணே!
இளைஞனாயும்
இருந்து பார்!
அவனது அவதி
உனக்கு தெரியும்!

மல்லிகை பூ வாங்கி போ!
மனைவியின் ஏக்கத்திற்கு
ஈடு கொடு!
குழந்தையின் கொஞ்சலில்
உறவாடு!
அலுவலக வியர்வையை
அடிக்கடி துடை!
பனிரெண்டு மணிக்கும்
பூபாளம் பாடு!
பொருணி பேசும் உலகிற்கு
உயர்வாய் நில்!
நாளை நிச்சயமில்லை
எழுந்து போ!
பெண்ணே சற்று நேரம்
கணவனாய் வாழ்ந்து பார்!
நிச்சயமாய்! அதுவும்
முடியாது!

கிழவியின் மாராப்பில்
கை சுத்தம் செய்!
நரைத்த பிறகும்
குடும்பம் தாங்கு!
ஓய்வு நேரத்தில்
ஊர் வம்பு பேசு!
கடந்த வாழ்வை
அசை போட்டு பார்!
உருவத்திற்கு
புது பொலிவு கொடு!
உறவுகளை மெருகேற்று!
நாளைய தோன்றலுக்கு
வழி வகை செய்!
பெண்ணே! இப்போதும்
உன்னால் முடியாது
ஆணின் அருமை
தெரிந்து கொள்ள!
ஆணாய் பிறக்காதே!
அவதிப்பட்டு வாழாதே!

Tuesday, 2 April 2013

உன் முகம் காட்டு!

மனிதனே
உன் மனத்திரையை
கிழித்தெறிந்துவிட்டு
வெளியே வா!

உன்னால்
உரு பெறத் துடிக்கும்
பிரச்சனைகள்
ஏராளம்!

உனக்குள்ளே
பூட்டி வைத்த
உன் எதிர்காலம்
முழுமை பெற
வேண்டாமா?

உன் எதிரியின்
தாக்குதல்
உடன் மறைய
வேண்டாமா?

உன் உறவின்
ஓலங்களை
செப்பனிட
வேண்டாமா?

உன் சிந்தனை
சிதறல்கள்
உலகிற்கு தெரிய
வேண்டாமா?

உன் அன்பின்
எக்கம்
சீர் பெற
வேண்டாமா?

உன் காதலின்
தாகம்
புதுப்பொலிவு பெற
வேண்டாமா?

உன் வாழ்க்கை
சக்கரம்
முழு சுழற்சி பெற
வேண்டாமா?

உன்னால்...
உன் மனத்தின்
மாயத்திரையை
கிழித்தெறிய
முடியும்!

வெளியே வா
உலகிற்கு
உன் முகம்
காட்டு!

Monday, 1 April 2013

ஏங்காதே!

சிரிக்கிற
சிரிப்புக்கெல்லாம்,
சிந்தை கலங்கி,
நிலை தடுமாறினால்...
நீ! சிறந்த மனிதனாவது
எப்போது?

பெண்ணின் சிரிப்பு கண்டு
ஒருபோதும் மயங்காதே!
வாழ்வை வீணடித்து
அவளை நினைத்து
ஏங்காதே!

காதலில் சிக்காமல்
சிங்கமென புறப்படு!
புது மனிதனாய் மாறி
புதுமை செய்!