Thursday, 23 January 2014

எப்போது மறைவாய்...

மின்னலாய்
ஒளிர்ந்திருந்தால்...
என் மேனி பட்டு
விலகியிருக்கும்!

வானவில்லாய்
என்னை
வட்டமிட்டிருந்தால்...
அது கனவாய்
கன நேரத்தில்
மறைந்திருக்கும்!


மழையாய்
பொழிந்திருந்தால்...
என் மேனி பரவி
சிறிது நேரம்
சில்லிட்டு
காய்ந்துவிடும்!

இடியாய் கூட
இறங்கியிருந்தால்...
என் உடல் தகர்த்து
இளைப்பாறி
சென்றிருக்கும்!

என் உடலுக்கு
உடலாய்,
என் உள்ளத்துக்கு
உள்ளமாய்,
என் உயிருக்கு
உயிராய்...
கலந்த அவள்
எப்போது மறைவாள்?


சாகும் வரை...

சூழ் நிலையில்
நான் செய்த
தவறுகள் கூட...
என் மனமென்னும்
நீதி மன்றத்தில்,
சரியென்று
தீர்ப்பு பெற்றவை!


உலகின் கண்களுக்கு
தவறாய் பட்டது,
எனக்கு சரி!
எனக்கு சரியாய்
பட்டது...
எனக்கு மட்டுமே சரி!

என் மனம்
நான் சாகும் வரை
சாகாது!
என் எண்ணங்கள்
நான் ஓயும் வரை
ஓயாது!

விடிந்த பின்...

கருமையின்
விளிம்பினில்,
அற்புதமாய்
தோன்றிய
இயற்கை!

அவசர
கோலத்தில்,
அள்ளித் தெளித்த
புள்ளிகள்!

நிழலுக்கும்
உண்மைக்கும்
இடையே...
ஏகாந்த பாட்டு!


வெல்வதும்,
வீழ்வதும்...
வீண் விளையாட்டு!

நடப்பது நடக்கட்டும்
என்ற சோம்பேறியுடன்,
என் கூட்டு வாழ்வு!

இடியும் மின்னலும்
இல்லை என்றாலும்...
மழை உண்டு!

அவள் தம்
உறவுகள் கூட ...
இயற்கையின்
கண் சிமிட்டலில்
தோன்றிய
நட்சத்திரங்கள்!

அவைகள்...
விடிந்தபின்
நிச்சயம் மறையும்!

வசந்தம்!

கனல் ததும்பும்
உள்ளத்தின்,
கலங்கிய நேரம்!
கவிதை பிறக்குமா?
என்ற கேள்விக்குள்
தோன்றிய...
புதுக் கவிதை!


நான் இறந்த
பின்னும்...
எனக்கு தோன்றிய
வசந்த காலம்!

Thursday, 9 January 2014

நான் இன்பமாய்...

சோகத்தின்
சுகங்களை
பிரசவிக்க
தெரியாமல்,
தத்தி தவித்த
என் சின்ன
இதயத்துக்குள்...
எண்ணற்ற
கேள்விகள்!


விடுதலை
என்றாவது
கிடைக்குமா?
இல்லையேல்
என் இதயம்
சிதைந்துபோய்
சீரழிந்து விடுமா?
என்ற குழப்பம்!

ஒரு பேரதிர்ச்சி
தந்த அவளின்
அந்த ஒரு வார்த்தை?
நஞ்சுக்கு நஞ்சு!
நான் இப்போது
சோகத்துக்குள்ளும்
இன்பமாய்!
என் இதயம்
பண்பட்டுவிட்டது!


Saturday, 4 January 2014

புழுவாய்...

என் இதயம்...
இனி புழுவாய்
மாறி அழிந்தாலும்
அழியுமே அன்றி,
இனியும் அவளின்
உறவுக்கு...
உரிமையில்லை!

அவள் வகுத்து
தந்த வழியில்,
என் கால்கள்
அடியெடுத்து
வைக்க...
மறுக்கின்றன!


உறங்கிய
பின்னும்
ஓர விழியில்
அவளின் உருவம்
பதித்த தடம்,
எப்படி ஓய்ந்திருக்கும்?

காலத்தின் மாற்றம்
என்னை அவள்
கணக்கில் மின்னி
மறைந்த காதலனாய்
நினைத்து...
ஒதுங்கிவிட்டாள்!

பசுமையாய்
இருக்கும்போதே,
அவளுக்கு...
பாலைவன
கனவுகள்!

தோற்றமும்,
ஏற்றமும்,
என்றென்றும்
மாறலாம்!
அவள்....?





முகர்ந்த பூவாய்...

சோக வரிக்கு
சொர்க்கம் தந்த
அவளின்...
தாக வரிக்கு,
நரகத்தையா
தந்தேன்!

உயர்ந்த
பிறப்பினில்...
உன்னத வாழ்வாய்
எண்ணியதை,
முகர்ந்த பூவாய்
வீசி எறிந்தாள்!


மனதை மதிப்பாள்
என நினைத்து,
இனிமையில்
திளைத்த கண்களில்
மண்ணைத் தூவி,
மதிப்பை குறைத்தாள்!

மாறுபட்ட கருத்தால்,
அவசர சீற்றத்தால்,
எனது அன்பு உள்ளத்தை
அழித்தாள்!

வலியுறுத்த வில்லை!

அவள் தேவையில்லை
என்ற பின்னும்,
வலியுறுத்தலாமா?
என கனவும்...
கண்டதில்லை!

அன்பு வழிக்கு
அடிமை பட்ட நான்...
ஆர்ப்பாட்ட காமத்தில்
தடம் பதிக்கவில்லை!


உயர்வாய் எண்ணியதை
ஊறுகாயாய்...
எண்ணிய அவளின்
நெஞ்சத்துக்கு
பாராட்டுக்கள்!

கோடிப் பணம்
கொட்டி கொடுத்தாலும்,
குணத்தையே மதிக்கும்
என்னிடம் அவளின்
தீண்டல்கள்...
பிடிக்கவில்லை!

உயிரோவியமாய்...

மோகப் புயலின்
இறுதி அத்தியாயம்!
இதம் தந்த வாழ்வின்
எண்ணற்ற...
இன்னல்கள்!

ஓடி உழைத்த
உடலும்...
இதயத்தால்
தடம் புரண்டு,
நடை பிணமாய்!

நான்கு சுவருக்குள்
பூட்ட முடியாத
நச்சு சிரிப்புகள்!


சோகத்துக்குள்ளும்
தாகம் தீர்ந்ததென்று,
கேளி செய்தவளின்
வேகத்துக்கு...
இடைக்காலத் தடை!

என் எண்ணக்
குமுறலால்...
நெஞ்சத்தில் கீறல்!
ஆனாலும் அவள்
என் மனதில்
என்றென்றும்
உயிரோவியமாய்!

வலி தரும் சுகம்!

கூலி வாங்கி
உலையிலிட்டு,
கஞ்சிக்கு
கணவனை
கூப்பிட்டாள்!


எஞ்சியதை
சாப்பிட்டாள்!
இரவின் சாமத்தில்
கணவனின்
வலி தரும்
இன்ப சுகம்!

கண்ணுறங்கினாள்
அசதியாய்...
மீண்டும் அதிகாலை
குயில் கூவும்
நிச்சயமாய்!

சிந்தாத...

கூடி களித்து
ஒன்றாய் வாழ்ந்த,
சகோதரனின்
இதய ஓய்வுக்கு...
அவள் பூட்டிய
வாழ்க்கை
குதிரையை,
அவசர அவசரமாய்
சாட்டை கொண்டு,
அடித்து ஓட்டியதுதான்
காரணமோ?


அவள் நலமாய்...
ஆனால் நானோ
ஆயுளுக்கும்
சிந்தாத ஒரு துளி
கண்ணீரை?

சிதைந்த
என் இதயம்...
இனிமைக்காக
ஓய்வு தேடுகிறது!

கவிதைக்கு பின்...

என் கவிதைக்கு
பின்னால்...
காதல் அழுதது!

வாழ்வின் வசந்தம்
வகை தெரியாமல்
போனது!


மோகம் கூட...
முகவரியில்லா
சுவடுகளாய்
மறைந்தது!

காலம்
கைகோர்த்த பின்னே,
என்னையே நான்
யாரென்று கேட்டேன்!
அதன் பின்னே...
என்னை நானே
ரசித்தேன்!