Wednesday, 28 August 2013

நான் யாருக்காக...

கோபக் கனலில்
குணமறியா
குருடன் நான்!

தாபக் கதிரின்
தன்னிகரில்லா
இனியன் நான்!

மோகக் கனவின்
முகமறியா
கலைஞன் நான்!


காதல் தோல்வியின்
இருண்ட இதயம்
நான்!

எதை மூட?
எதை திறக்க?
விடை தெரியா
வீணன் நான்!

கண்டும், கேட்டும்,
புரிந்தும், அறிந்தும்,
அனுபவித்தும்...
அதனை வெளியிட
இயலா கோழை
நான்!

நான் யாருக்காக?

Tuesday, 27 August 2013

திட்டமிட்ட சதி!

சதி செய்பவனை
மதி கொண்டு
தகர்ப்பவன் மட்டுமே
சிந்திக்க தெரிந்தவன்!


நான்...
அன்புக்கு கூடவா
சதி செய்வேன்?
சிந்தனையின்
கேள்விகள்
தோன்றலாம்!

அது சிந்தனையின்
கிறுக்கல்களாய்
அமைதல் கூடாது!
திட்டமிட்ட சதி
அன்பைக் கவர
ஒரு போதும்...
இயலாது!


Sunday, 25 August 2013

சுயநலம்!

பிறந்தேன்...
பிறந்த பெருமை
தேடிக் கொள்ள
முயன்றதில்லை!

வளர்ந்தேன்...
வளர்ச்சியின்
முழு உருவை
காட்டிக் கொள்ள
விரும்பியது
இல்லை!

படித்தேன்...
படித்த பெருமை
என்னவென்று
யாருக்கும்
காட்டியதில்லை!


காதல் செய்தேன்...
அன்பை கூட
எனதாக்கிக்கொள்ள
முயன்றதில்லை!

வாழ்கிறேன்...
எதற்காக வாழ்கிறேன்
என்று சிந்தித்ததில்லை!

நான்...
ஒரு பகடைக்காய்!
உருட்டுபவர்களின்
இன்பத்துக்காகவே
வாழ்கிறேன்!

சுயநலம்...
எனது சாவுக்கு
பின்னாவது
வரட்டும்!

Saturday, 24 August 2013

எல்லையில்லா இருள்!

உடன் தரும்
சுகங்கள்
தொலை தூரத்தில்!

இடர்படும் நெஞ்சம்
படு வேகத்தில்!


சுடர் தரும்
வெளிச்சம்
என்னருகில்!

ஆனால்...
எல்லையில்லா
இருள் இவ்வுலகில்!

கரை சேர
தவிப்புகள்!

06.01.97.

Friday, 23 August 2013

அவமானங்கள்!

சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்
வாழ்க்கை என்னும்
வைபோகத்தில்
உரசினேன்!


இலகுவாய்
உயிரின் பிணைப்பை
காற்றிடைப்பட்ட
தூசியாய்...
அலைக்கழிக்க
செய்த இந்த
அற்ப மனதுக்குள்,
அன்பெனும்
அலைகளை
நான் எங்ஙனம்
பாய்ச்சுவேன்?

நான் என்றென்றும்
உயிர் வாழ
இனியுமா...
அவமானங்கள்?

Thursday, 22 August 2013

கதிரவனாய்....

உதிரம் கொதிக்கிறது
உயிர் சிரிக்கிறது!
உறவு ஓலமிடுகிறது
பிரிவு தவிக்கிறது!

ஊண் உறங்குகிறது
சல்லாபம் துளிர்க்கிறது!
பசுமை ஒளிர்கிறது
கருமை அழைக்கிறது!


நான் ஏங்குகிறேன்
அவள் தவிக்கிறாள்!
அரவணைப்பு எங்கே?
அன்பு பாய்கிறது!

நான்...
மூடிய முகிலுக்குள்
முகம் மறைத்த
கதிரவனாய்!

Tuesday, 20 August 2013

எழுப்புவாயா?

நீண்ட
தினங்களுக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான் கண்
விழித்திருக்கிறேன்!

எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில்...
நான் காம்பீரம்
கொண்டேன்!


என் கோபக்கனலில்
பல பெண்களை
தொலைத்தும்
விட்டேன்!

அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்!
மலையாய் இருந்த
நான் நிழலாய்!

இனி சோர்ந்துவிட்ட
சிங்கத்துக்கு காதலை
நிலாச் சோறாய் ஊட்டி,
புத்துணர்ச்சி தந்து
எழுப்புவாயா?

Monday, 19 August 2013

எதிரியான சோகம்!

ஊஞ்சலில்
உட்கார்ந்து
உறங்கிவிட்டு,
எழுந்த பின்
என்ன சோகம்


செயல்படும்
நேரத்தில்
சரியாக...
இல்லையெனில்
ஊஞ்சல் கூட
தூக்கு கயிறாய்
மாறும்!

தயக்கம்
தன்மானத்திற்கு
விருந்தாகுமா?

வெல்லக்கட்டிக்கு
சிற்றெறும்பு கூட
எதிரியான சோகம்!

Saturday, 17 August 2013

பொதி சுமக்கும்...

போகிற வழியில்
பொதி சுமக்கும்
கழுதை நான்!

பாரங்களை
மகிழ்ச்சியாய்
ஏற்கிறேன்!


ஏளனங்களை
எளிதாய்
எடுத்துக்
கொள்கிறேன்!

அவமானங்களை
பொருத்துக்
கொள்கிறேன்!

யாரைப் பற்றியும்
எனக்கு கவலை
இல்லை!
நான் போகும் வழி
தனிவழி!

எனது கடமைக்காக
மட்டும் நான்!

Friday, 16 August 2013

அதிகம் தேவை!

மாசு படிந்த
ஓவியம் என்று
தூய்மை செய்தேன்,
அதுவோ உயிர்பெற்று
சின்ன முத்தம் தந்தது!


உடைந்த கண்ணாடி
என்று உதறி தள்ளினேன்,
அதுவோ,
எனது பல
கோணங்களையும்
பிரதிபலித்தது!
 
தேவையில்லை
என்று தெளிவாய்
இருந்தேன்,
ஆனால்...
தெவிட்டாத தேனாய்
மேலும் தேவையானது!

Thursday, 15 August 2013

விடையில்லை!

பாம்புத் தோல்
விற்பவனுக்கு
பாம்பின் நஞ்சு
தெரியாமலா
இருக்கும்?

நிலக்கரியை
தோண்டுபவனுக்கு
பூமியின் அபாயம்
அறியாமலா
இருக்கும்?


முத்தெடுக்க
துணிந்தவனுக்கு
கடலின் ஆழம்
உணராமலா
இருக்கும்?

அடையும்
இலக்கை தேடி
செல்பவனுக்கு
செல்லும் வழியில்
சலனம் வந்தால்...
விடையில்லை!

Wednesday, 14 August 2013

ஓய்வெடுக்க...

சொட்டு சொட்டாய்
அன்பு நீர் பாய்ச்சி,
குற்று செடியாய்
நெஞ்சத்தில்
வளர்த்து,
காதல் பூ மலர
காத்திருந்தேன்!


அவசரமாய்
பூத்த அந்த பூவோ,
பூத்ததும்
கருகியது!
எனது மனமும்
இருகியது,
காதல்...
தோல்வியால்!

கருகிய பூவுக்கு
காவல் இருக்கிறேன்!
இனியாவது
என் இதயம்
ஒய்வெடுக்கட்டும்!

Tuesday, 13 August 2013

மூச்சுக் காற்று!

இளமுகில்
கதிரவனையும்
தழுவும்,
சந்திரனையும்
தழுவும்!

இளந்தென்றல்
மலையின்
உச்சியையும்
தழுவும்
கடலின்
குளிர்ச்சியையும்
தழுவும்!


மாலைவெய்யில்
வானையும்
தழுவும்,
மண்ணையும்
தழுவும்!

கண்ணே!
நம் மூச்சுக்காற்று...
உன்னையும்
என்னையும்
மட்டும்தான்
தழுவும்!
அது காதல்
வெப்பத்தில்
நம்மை...
இணைக்கும்!

Monday, 12 August 2013

தேவைதானா?

பொய்களுக்கு
மகுடம் சூட்டி
அழகு செய்யும்
தரம் கெட்ட
மக்கள் கூட்டம்...

உண்மையை
சூரையாடி
நடுத்தெருவில்
வீழ்த்திவிட்டு,


நல்ல மனிதனை
கெட்டப் பெயர் சூட்டி
புதைகுழியில்
தள்ளும்...

சாகசச் செயல்
தேவைதானா?

Sunday, 11 August 2013

நான் மட்டும்...

என்னை...
பார்த்து ரசித்த
உயிர்களை,
எண்ணிக்கையில்
நினைத்தேன்!

அள்ளிப் பருக
ஆசைப்பட்டு
தத்தளித்து
துடித்தேன்!


விடிவெள்ளி
முளைத்ததென்று
அள்ளி அனைத்தேன்!
அனால்...
என்னை எள்ளி
நகைத்துவிட்டு,
ஏங்கவைத்து
விலகியது
உயிரின் உறவுகள்!

நான் மட்டும்
உயர்வு பெற்றால்,
அனைவரும்
என்னருகில்?

Saturday, 10 August 2013

சாகத் துடிக்கிறேன்!

அன்பு வழி
உணர்ச்சிக்கு
நான் அடிமை!
பகிர்மானங்கள்
ஊடல்களாய்
மாறினாலும்
கவலையில்லை!

அது
அன்பின் வழியா?
அதனை
சிந்திக்கிறேன்!
நான் என்னையே
நேசிக்கிறேன்!


நான்
என்னுடனேயே
வாழ்கிறேன்!
எனக்காக யாரும் 
அன்பு...
செய்யவில்லை!

உயர்வுகளும்
தாழ்வுகளும்
என்னை...
உருப்பெறாமலா
செய்துவிடும்!

உறுதியாய்
எதிர் நீச்சல்
நீந்துவேன்!
அன்புக்காக
சாகவும்...
துடிக்கிறேன்!

Friday, 9 August 2013

மனித ஓலங்கள்!

மழலை
பேதங்களின்
மடியில் சிதறிய
சந்தனங்கள்!

சந்தடி சாக்கில்
நிமிர்த்த
நினைத்த
நாய் வால்கள்!


கோடியில்
கொடுமை
தெரிகிறது!
வீதியில் விழி
தவறுகிறது!

அவசரமாய்
ஆர்ப்பாட்டங்கள்!
இச்சைக்கு பின்
இரத்தமும் தசையும்
பிரியத் துடிக்கிறது!

இயற்கையின்
அவசத் துடிப்பு
மனித ஓலங்கள்!

Thursday, 8 August 2013

மெளனம்!

மனதுக்குள்
ஏற்பட்ட
எல்லையில்லா
துன்பங்களின்
வெளிபாடு!

இடர்பட்ட
நெஞ்சத்தின்
இறுமாப்பு!

உணர்ச்சி
குவியலின்
உன்னத
வழிகோல்!









உடல் தரும்
மாற்றத்தின்
வெகுமானம்!

கோபக்
கனலின்
உச்சக்கட்டம்!

உரு தவறிய
சிந்தனைகளை
ஒரே பொழுதில்
குவித்து வைக்கும்
இந்த மெளனம்!

Wednesday, 7 August 2013

அவளுக்காக...

அவள்...
தென்றலாய்
வருவாள் என்று
தவித்து போய்
காத்திருந்தேன்!


ஆனால்...
புயலாய் வந்து
புரட்சி செய்தாள்!
என்னை காதல்
செய்ய மறுத்தாள்!

இப்போது...
கடும் வெய்யில் கூட
கடினமாய் இல்லை
என் உடலுக்கு!
அவளின் கடும்
வார்த்தை?
கொதிக்கிறது!

Tuesday, 6 August 2013

அழகி...

ஆர்ப்பாட்ட
உலகில்
அவளும்
அழகி!

தன்னிகரில்லா
தனிமையின்
பிறவி!

ஊமையாய்
வாழும்...
உன்னத
உருவம்!


காதல் என்ற
சொல்லுக்கு,
புன்னகையை
மட்டுமே
விலையாய்
தந்தவள்!

என்றாவது
ஒரு நாள்
வாய் விட்டு
சிரிப்பாள்!
அன்று எனது
காதல்...
அந்த அழகிக்கு
அழகு சேர்க்கும்!

Monday, 5 August 2013

குமட்டுகிறது...

குமட்டிய பாலை
கைகளில் வாங்கி,
அவசரமாய் செய்த
அசிங்கங்களை
அழகாய் சுத்தம்
செய்து....
முகத்தை
வெண்மையாக்கி,
பொட்டுவைத்து
தலை வாரி,
பூவும் சூடி,
தன் மகளின்
அழகை ரசித்து
அன்பு முத்தம்
தந்த தாய்...


முதியோர்
இல்லத்தில்
மகளை பார்த்து
கை நீட்டி...
கூப்பிட்டாள்!

மகளோ...
பார்த்தால் குமட்டுகிறது
வாருங்கள் வீட்டிற்கு
செல்வோம் என்று,
கணவனின் கைப்பிடித்து
இழுத்தாள்!

Sunday, 4 August 2013

தணியாத தாகம்!

அவளை
பார்த்த பின்,
காதலின்
வேகம்!

அவளை
நினைத்த பின்
நிமிர்ந்து
நின்ற...
மோகம்!


காதலை
மறுத்த பின்
வாட்டி
வதைத்த...
சோகம்!

அவளை
பிரிந்த பின்
தணியாத...
தாகம்!

Saturday, 3 August 2013

விழித்த பின்...

கூர்ந்து
பார்த்ததில்
சோகம்
தெரிந்தது!

சோர்ந்து
படுத்ததும்
மோகம்
தவித்தது!

கனவு
கண்டதும்
வேகம்
தனிந்தது!


உறவு
கொண்டதில்
உண்மை
புரிந்தது!

உரசிக்
கொண்டதும்
தன்மை
விளைந்தது!

தவிப்பு
வந்ததும்
ராகம்
வைத்தது!

விழிப்பு
வந்ததும்
தாகம்
தனிந்தது!
அவளின்
மோகம்...
குறைந்தது!

Friday, 2 August 2013

காத்திருப்பேன்.... (கிராமத்து வாசம்)

மருவாத வேண்டி
என் செல்ல ராசா
நீங்க பேருதவி
செஞ்சீக!
மஞ்ச தன்ணியெடுத்து
மச்சானோட விளையாட
ஓடோடி வந்துபுட்டேன்!

பட்டினத்து கப்பலாட்டம்
தத்தளிச்சு நிக்கிறேனே,
பழசையெல்லாம்
மனசில் வச்சி,
பாழும் தூணோட
முட்டி மோதி
அழுகிறேனே!

என் பொழப்பையெல்லாம்
மறந்துபுட்டு
போற வழி பாத்து நின்னேன்!
எக்கு தப்பாய் மனசு வச்சி
ஏங்கி போயி நிக்கிறேனே!


குதிரைக்கு சாட்டை வாங்க
கொடிகாட்டு சந்தைக்கு
போன மச்சான்,
உங்க செல்ல கிறுக்கிக்கு
மஞ்சக் கயறும், மாலயும்
மறக்காம வாங்கி வாங்க!

மந்தவெளி வாக மரம்
என்ன வரச்சொல்லி
கூப்பிடுதைய்யா!
சித்தங்கலங்கி, கயறு எடுத்து,
தூக்குபோட்டு, செத்து போக
போறேன் மச்சான்!

மன்னவன் உங்க கைபட்ட மேனி,
மண்ணு திங்க போகுதைய்யா!
நான் தமிழச்சி அதனால
தரங்கெட்டு போக மாட்டேன்,
காத்திருப்பேன் ஆச மச்சான்
உனக்காக...
கடைசியில் பைத்தியமாய்
இறந்திருப்பேன் எனக்காக...!


Thursday, 1 August 2013

இருள்...பிறந்தது!

உரசுகிற
போதெல்லாம்
ஒளிரும்
தங்கம் நட்பு!

பளிச்சிட
வேண்டுமாய்
அடிக்கடி உரசி,
உயிர் பெற்ற
நட்பு...
காதலாய்
மாறும்போது?


தங்கம்
உருவிழந்தது,
காதல்
உயிர் பெற்றது!
கடைசியாய்
இருள் பிறந்தது!

நட்புக்கு
கிடைத்த இறுதி
வெகுமானம்...
காதலின்
தோல்வி!