Thursday, 28 February 2013

தோப்பு தேம்புகிறது...(கிராமிய நடை)

அடியே
பேத்தி மக!
குத்த வச்ச பின்னால
குலுங்கி குலுங்கி
சிரிக்கிறியே!

நட்டுவச்ச தனிமரமா
நடுத்தெருவில்
நிக்கிறியே!

பாவி மக
ஒன் பரிதவிப்பு
பகல் முழுசும்
தெரியாதடி!

சல் சல்னு
சத்தம்போட்ட
கொலுசு சத்தம்,
நாள் முழுசும்
நானும் கேட்டு
வய்க்க முடியாதடி!

அவசரமா பூத்த
பொண்ணே!
ரதி ஒன்ன
சூடிகிட்டா,
நீ! கொடுத்து வச்ச
கொம்புக்காரி!

சதி ஒன்ன
சூடிகிட்டா,
நீ! எடறி விழுந்த
எலவம்பஞ்சி!

பாவி மகள
பதனமா கேட்டுக்கடி!
ஆடி ஓடி குதிக்காம,
அவசரமா ஓடாம,
நாள் முழுக்க
காத்திருந்து,
நல்ல வழி தேடிக்கடி!

அடி பேத்தி மக!
பல் இல்லாம நான்
சிரிக்கலியா?
பின் புறமா போ
மஞ்ச தண்ணி
எடுத்து வாறேன்!

Wednesday, 27 February 2013

தென்றலும் மயிலும்!

மயில் விரித்த
தோகையால்
தென்றல்
வந்ததா?

அல்லது...
தென்றல் வந்து
சில்லிட்டதால்,
மயில் தோகை
விரித்ததா?

பரவு தென்றல்
பரவிவிட்ட
மயில் தோகையே!
சிறிது சிறிதாய்
அசைந்து வந்து
என் கன்னத்தில்
உரசிவிட்டால்...

என் உயர்ந்த
உள்ளம்,
மயிலே! உன்னை
மழைநீரில்
குளிப்பாட்டி,
என் மூச்சுக்காற்றில்
உலர வைக்கும்!

Tuesday, 26 February 2013

நல்லவன்!

நல்லவன்
நிலைப்பதில்லை!
இது நாம் கூறும்
பழம் மொழி!

நல்லோர்
நிலைக்கிறார்கள்
நலம்குலைந்து!
இது புதுமொழி!

நல்லவன்
நல்லவற்றை
மறக்கும்வரை
நசுக்கபடுவான்
இவ்வுலகில்!

நல்லவன்
நலமாய்
வாழவில்லை
இப்பூவுலகில்!
மாறாய்...
கேட்பாரற்று,
நோய்வாய்பட்டு
முடக்கப்படுவான்
ஒரு மூலையில்!

நன்றிகெட்ட
இவ்வுலகில்
நல்லது
நிலைத்தால்தானே,
நல்லவனும்
நிலைப்பான்!

Monday, 25 February 2013

உரசிப்பார்!

பொய்யுடன்
உரசிப்பார்,
கவிதையின்
உண்மை நிலை
விளங்கும்!

தங்கத்தை
உரசிப்பார்,
அதன் தரம்
எளிதில்
விளங்கும்!

நல்லவர்களுடன்
உன்னை உரசிப்பார்,
நீ! கெட்டவனாய்
தெரிவாய்!

கெட்டவர்களுடன்
உன்னை உரசிப்பார்,
நீ! நல்லவனாய்
தெரிவாய்!

மனிதனே!
நீ! உரசிப்பார்த்து
மாறுபட்டால்,
நீதான்
தரமான மனிதன்!

உறவுகள்!

வாயளவில்
உச்சரிக்க
படவேண்டிய,
மேலான
வார்த்தைகள்
மட்டுமல்ல!

திரை மறைவில்கூட
அதன் கருப்பொருளை
கலங்கப்படுத்த
கூடாது!

உறவுகள்
உள்ளத்தளவில்
உரசிப்பார்க்கும்
பொழுதுதான்,
அதன் உண்மை நிலை
பிரதிபலிக்கும்!

உடல்...
உயிர்...
உறவு...
ஒன்றுபட்டால்,
அதுதான்
நல்வாழ்வு!

Sunday, 24 February 2013

எதிர்காலம்!

எதிர்காலம்!
தெருவிளக்கற்ற
கரடு முரடான
பாதை!

திரை மறைவில்
அரங்கேற
துடிக்கும் நாடகம்!

கண் கெட்டவனுக்கு
கிடைத்த கதிரவனின்
காணொளி!

மனிதன்
சுதந்திரமாய் வாழ
விதிக்கப்பட்ட
தடைச்சட்டம்!

இருமாப்பில்
சிரிப்பவனை,
எள்ளி நகையாடும்
உயர்பொருள்!

மேலிருப்பவனை
கீழேயும்,
கீழ் இருப்பவனை
மேலேயும்,
மாற்றும்
சுழற்கருவி!

மொத்தத்தில்
இயலாதவனுக்கு
எட்டாத பழம்!

காற்றோடு....

அடியே!
மறந்தும்
உன் பெயரை
உச்சரிக்க
மாட்டேன்!
ஏன் தெரியுமா?

உன் பெயரும்
உன்னைப்போல
காற்றோடு
காற்றாய்,
மறைந்திடுமோ?
என்ற அச்சத்தால்!

தரம்!

தரம்...
என்றும்
வாழ்க்கைக்கு
நிரந்தரம்!

வாழ்பவனும்,
வாழ்ந்து
கெட்டவனும்,
வாழ்க்கையில்
போட்டிபோட்டு
முன்னேற
துடிப்பவனும்,
பேணி காக்க
வேண்டிய
கைப்பொருள்
த ர ம்!

தரம் கெட்டவன்
தரணியில் வாழ
தேவையில்லை!

தானாக வரும்
தரத்தை,
நிரந்தரமாய்
மாற்ற-மனிதன்,
எதிர் நீச்சல்
போட வேண்டும்!

தரம் உள்ளவன்
தங்கத்திலும்
மேலானவன்!
நினைவில் கொள்!

Saturday, 23 February 2013

திருமணம்!

இரு மனத்தின்
இணைப்பு
ஒரு மனதாய்
மாறினால்,
அதுதான்
திருமணம்!

இல்வாழ்வு
இனிமையானது,
அது இறுதிவரை
கிடைக்காது!

இளஞ்சூட்டில் ஆமை
இனிமையாய்
துள்ளிக்குதிக்கும்,
இறுதியில்
கொதிநீரில்
நொந்து சாவும்!

வாழ்வின் முற்பகுதி
இன்பம் கண்டால்,
இறுதியில்...
துன்பம்தான்!
மறவாதே!

Friday, 22 February 2013

மாலை!

நேரம் இப்போதோ
மயங்கும் மாலை!
அவளோ நான்
அணிகின்ற மாலை!
காதல்! ஆனாலும்
சுரமில்லா வேளை!

அந்த மாலை...
அவளுடன்
நான்கழித்த
நினைவுகளுக்கு
கண்ணீர் மாலை!

சரசமாய் அவளுடன்
உறவாடி-நான்
அணிவித்த
காதல் மாலை,
கசங்கிய மாலை!

மாலைப்பொழுதில்
மனம்விட்டு பேசிய
பேச்சில் ஏற்பட்ட
அன்பின் ஓலை!

காலை மாலையாய்
காத்திருந்தாலும்,
கசங்கிய மாலையாய்
வீசிவிட்ட பெண்ணின்
களிப்பான லீலை,
என்றென்றும்
என் மனதில்
செப்பனிடாத சாலை!

மாலையை,
இன்று மாலையில்
மாற்றிக்கொள்ள
காத்திருந்த நேரம்,
அந்த மாலையை
அடுத்த நாள்
மாலைக்கு,
அவள் தள்ளிவைத்த
அன்பின் ஓரம்!

எத்தனை மாலை
வந்தால் என்ன?
அவளின் மாலை
எனக்குதான்!
அது....
இறுதி பயணத்தின்
பூமாலை!

Thursday, 21 February 2013

நேரம்! நல்லநேரம்!

நேரம்! நல்லநேரம்!
என் காதலி
எனை பிரிய,
நான் தவிக்கும்
நல்லநேரம்!

ஊர் வம்பு
எனைபார்த்து
ஓடிவரும் நேரம்!

கால்தேய
நான் நடந்தும்,
எனக்கென்று எதுவும்
நடக்காத நேரம்!

கல்வி களிப்பில்
நான் நீந்துவதை,
தடுத்து வைத்த
நல்லநேரம்!

நான் தேடிச்சென்ற
நண்பர்கள்,
எனைவிட்டு
பிறர் தேடிய நேரம்!

விளையாட்டாய்
நான் நினைத்த
என் வாழ்க்கை,
எனை பார்த்து
விளையாடிய நேரம்!

நிழலாய், உடலாய்,
உயிராய்,உறவாய்,
துணையாய்
இல்லாத நேரம்தான்,
என் வாழ்வின்
நல்லநேரம்!

ஏன் இந்த தயக்கம்!

ஓடிவா!
உனது எதிர்காலம்
என்னருகில்!

ஏன் என்மீது
துணிவில்லையா?
ஒவ்வொருவனும்
தேடும் நிம்மதி
என்னிடம் தான்
உள்ளது!

என் இந்த தயக்கம்?
என்னை பார்த்து
ஏளனமா?
என் கைகள்-உன்னை
அரவணைக்க
காத்திருக்கின்றன!

மனிதனே!
ஆறிலும் சாவு!
நூறிலும் சாவு!
துணிவு கொள்,
காதல் செய்!
இறுதிப்பயணத்தில்
எனை நோக்கி வா!

மயான அமைதி
உனக்கு நிச்சயம்
கிடைக்கும்!

Wednesday, 20 February 2013

அன்பு கிடைக்குமா?

பிறந்த நாள் முதல்
பெற்றெடுத்த
தாயிடம்
கிடைக்கவில்லை!

பேனி வளர்த்த
தந்தையிடம்
கொஞ்சமுமில்லை!

அருகாய் வளர்ந்த
அண்ணன் தம்பியிடம்
சுத்தமாயில்லை!

என் இதயத்தை
உரசி சென்ற
காதலியிடம் கூட
சிறிதுமில்லை!

நான் ஏங்கி தவிக்கும்
அன்பு யாரிடம்
கிடைக்கும்?

இதோ! உங்களிடம்
கேட்கிறேன்!
அன்பு கிடைக்குமா
அன்பு?

Tuesday, 19 February 2013

ஊடலும் கூடலும்!

தன்னைத்தானே
சுற்றிவரும்
பூமியும்,
இணைந்து வரும்
சந்திரனும்,
ஒன்றையொன்று
எந்நாளும்
பிரிவதில்லை!

இருப்பினும்
காதலின் பிடியில்
சிக்கித்தவிக்கும்
சின்னக்காதலர்க்கு,
இரவுக்குளிர்ச்சியும்,
பகலின் வெப்பமும்,
முழுநிலவின்
இனிமையும்,
மறை நிலவின்
தனிமையும்,
மாற்றமான
உணர்வுகள்!

இதயத்தை வருடும்
முழு நிலவும்,
கொதிக்கும்
கோபத்தை தரும்
கதிரவனும்,
காதலர்க்கு
ஊடலும் கூடலும்!
ஓ! இது....
இயற்கையின்
பறிமாற்றம்!

Monday, 18 February 2013

வசந்த காலம்!

எனை நினைத்து
நீ ஏங்கிய
சிலகாலம்
மறைந்து,
உனை நினைத்து
நான் ஏங்கும்
பல காலம்
வந்துவிட்டது!

நமக்குள்ளே
நாம் வளர்த்த
காதலின் தாகம்,
காத்திருக்க
வைத்துவிட்ட
பருவத்தின்
காலம்!

காலம் கடத்தி
காத்திருக்க
வேண்டாம்
நாமும்!

ஓடிவா கண்ணே!
இதோ வந்துவிட்ட
வசந்த காலம்,
நாம் செய்ய
காத்திருக்கும்
திருமணத்தின்
கோலம்!

மனதுக்குள் மழை!

மனதுக்குள் மழை!
தேன் துளி சிந்தும்
தூவானமா?
இல்லை!

காற்றுடன் கூடிய
சிறு தூறலா?
இல்லை! இல்லை!

இடியுடன் கூடிய
பெருமழையா?
இல்லவேயில்லை!

புரட்டி போடும்
புயல் மழையா?
அறவேயில்லை!

காதலே!
உன்னை எண்ணி
நான் சிந்தும்
கண்ணீர் மழை!

கணக்கு!

பழையக் கணக்கை
சரிபார்க்க
எனது நாட்குறிப்பை
புரட்டினேன்!

புதிய கணக்கில்
ஒன்றிரண்டு
இடித்தது!

அவை என்ன,
அச்சடித்த
நோட்டுகளா?

இல்லை! இல்லை!
என் அன்பு
காதலிகள்!

Sunday, 17 February 2013

இதயக்கோளாறு!

உன்னை
நினைத்து நினைத்து
நினைவுகளை
சுமை தாங்கிய
என் இதயத்தில்
கோளாறாம்!

கள்ளமாய்
பழகும் உன்னை
நல்லவளாய்
காட்டிய,
என் கண்களில்தான்
கோளாறு என்று
மருத்துவருக்கு
தெரியவில்லை
போலும்!

சுவை!

மஞ்சத்தில்
உனை நினைத்து
கனவு கண்ட என்னை,
உன் நெஞ்சத்தை விட்டு
நொடிப்பொழுதில்
உருட்டிவிட்டாய்!

என்ன இனிமை!
நிலை கெட்ட பின்னும்
என் இதயம்
உன்னையே
ரசிக்கிறது!

பாவி இதயம்
பரிதவிக்கும் போது
பழச்சாறு சுவைத்தேன்,
ஆனால்...அதுகூட-உன்
வஞ்சக்காதல் போல
புளிப்பாய் போனதடி!

Saturday, 16 February 2013

நோயாளி!

மயக்கம்
என்னை
சந்தித்து,
நலமா?
என்றது!

என்னையே
எந்நாளும்
தழுவிவரும்
உனக்கு,
நலம் கூற
தேவையில்லை
என்றேன்!

ஆம்! நான்...
காதல் மயக்கத்தில்
கலங்கி வாழும்,
கனிவான
நோயாளி!

மாசற்ற...மடல்!

மயிலே! நீ...
மடல் வரைய
மயங்கி காத்திருந்தேன்!

மனக்குமிழில்
மாசற்ற கொந்தளிப்பு!

மங்கலாய்... நீ...
மசித்து வரைந்த
மாபெரும் மடல்!

மதிகெட்ட உள்ளத்தை
மடியவைக்க,
மணித்துளியில்
மலர்ந்தது!

மானே! உன்...
மடித்த மடலில்
மலர் வாசம் இல்லை!
மலையாய் உன் இதயம்
மடியக் கண்டேன்!

மாசில்லா உன் கண்களில்
மருண்ட பார்வையை,
மனக் கண்ணில் கண்டேன்!
மலரே! இது மாசற்ற மடல்!
மயக்கும் உன்னோடுதான்
மணம் பரப்பும் என் காதல்!

Friday, 15 February 2013

நீ! மோசம்!!

அடி பெண்ணே!
புது செருப்பைகூட
கடிக்காமல்
பழக்கும் நான்...

உன் சின்ன உதடு
சிதறி கடிப்பதை,
தடுக்க
முடியவில்லையே!
ஏன்?

ஓ! நீ...
செருப்பைவிட
மோசம்!

கரைசேரும் அலைகள்!

அடியே!
நீ அலை அலையாய்
ஒடிவந்து,
என்னை சந்தித்த
போதெல்லாம்,

என்காதல்
ஏற்றம் பெற்று
மிளிர்வதாய்
நினைத்தேன்!

சட்டென நீ!
மறைந்த பின்னே
சிந்தித்தேன்!
ஓ! நெட்டலைகள்
கரை சேர்ந்த பின்னே,
கரைந்தல்லவா
போய்விடும்!

அதனால் தானோ
அவசரமாய் நீயும்
என்னைவிட்டு
பிரிந்தாய்?

Thursday, 14 February 2013

நேற்று! இன்று! நாளை!

கண்ணே!
நேற்று நீ அவனுக்கு
எழுதிய கடிதம்
கண்டேன்!
மிக்க மகிழ்ச்சி!

இன்று நீ
எனக்கு தந்த
காதல் கடிதம்
கண்டேன்!
மிக்க அதிர்ச்சி!

நாளை நீ
எழுதப்போகும்
கடிதம் யாருக்கு?
இப்போதே கூறிவிடு!
நான் அவனையாவது
காப்பாற்றுகிறேன்!

உலக சாதனை!

கண்ணே!
நீ இதுவரை
தோற்கடித்த
இதயங்களின்
எண்ணிக்கையை,
என்னிடம் மட்டும்
கூறிவிடு!

உன் பெயரை
உலக சாதனை
புத்தகத்தில்
இடம்பெறச்செய்ய,
என் நெஞ்சம்
துடிக்கிறது!

வெடிகுண்டு!

அடியே!
வெடிகுண்டு
வைக்காமலேயே,
என் இதயத்தை
தகர்த்துவிட்ட நீ!

இந்திய
ராணுவத்திற்கு
உடனடியாக
தேவை!

Wednesday, 13 February 2013

மாற்றம்!

அடியே!
மூன்றாம்பிறையில்
கவிதை எழுதுகிறேன்!
வாடாமல்லியில்
வாசம் காண்கிறேன்!

பேரிரைச்சலில்
இனிமை காண்கிறேன்!
அருவருப்பை மட்டுமே
ரசித்து வருகிறேன்!

கசப்பை மட்டுமே
சுவைத்து வருகிறேன்!
கொதிநீரில்தான்
குளிர்ச்சி காண்கிறேன்!

இவையெல்லாம்
மாற்றங்களை
தரவில்லை என்னில்!

ஆனால் நீ!
என்னை விட்டு
பிரிந்தது மட்டும்தான்,
எனக்குள்ளே
மனமாற்றத்தை தந்தது!

Tuesday, 12 February 2013

நீங்கள் காதலர்களா?

என்ன!
நீங்கள் காதலர்களா?
சற்று நில்லுங்கள்!

கயவர்களின்
காவலை
உதறித்தள்ள,
உங்கள் உதிரத்தில்
துணிவிருக்கிறதா?

கனவுலகில்
சஞ்சரிக்கும் நீங்கள்,
நேருக்கு நேர் கவிபாட
துணிவிருக்கிறதா?

நெஞ்சத்தில்
மணம் நடத்தி
பலஇரவு கழித்த நீங்கள்,
உண்மயில் உலா வர
துணிவிருக்கிறதா?

உன்னைவிட்டு  அவளும்
அவளைவிட்டு நீயும்,
கடைசிவரை பிரியாத
எண்ணத்துணிவிருக்கிறதா?

சுற்றத்தார் கெடுபிடியில்
சுழன்றுவிடாமல்
ஏற்றமிகு காதலை,
பறை சாற்ற
துணிவிருக்கிறதா?

நீங்கள் வாழப்பிறந்தவர்கள்
கெட்ட சாவை உதறித்தள்ள,
துணிவிருக்கிறதா?

இன்னல் பல வந்தாலும்
கடைசிவரை காதலை
பரிமாற துணிவிருக்கிறதா?

இல்லறம் செய்ய
இனிய பல காலம் உண்டு!
நல்லறமாய்
நயவஞ்சகர்கள் நடுவில்
வாழ துணிவிருக்கிறதா?

காதலர்களே!
இக்கேள்விகள் உங்கள்
மனதை துளைக்கவில்லை?

ஓ! காதல் கொண்ட
நெஞ்சங்கள்,
கண்டவற்றை யோசிக்காது!

கவலையில்லை
காதல் செய்யுங்கள்
தோல்வியை தழுவுங்கள்!
காதலில் மட்டும்தான்
நஞ்சும் இனிக்கும்!


Monday, 11 February 2013

இயற்கை கூட....!

அடியே!
உன் முகம் கண்டால்,
இயற்கை கூட
ஏமாந்துவிடும்!

நீ சிரித்துவிட்டால்,
முத்துமணி மாலைகூட
பொறாமை கொள்ளும்!

உன் நடை கண்டால்,
மயில் நடமாடுவதை
தவிர்த்துவிடும்!

உன் உருவம் கண்டால்,
என் அருந்தமிழ் நங்கை
தன் அழகு கிரீடத்தை
சூட்டி மகிழ்வாள்!

உன்னை ஊடுறுவிய
நான் மட்டும்,
உன் ஆழ் மனதின்
அழகு காதலை
திருடிக்கொண்டேன்!
போ.....!

Sunday, 10 February 2013

சிரிக்காதே!

கண்ணே!
நீ உனை மறந்து
சிரித்தாயாமே?
மிக்க மகிழ்ச்சி!
என் உள்ளம்
உவகை கொள்கிறது!

ஆனால் நீ....
எனை மறந்து
சிரித்துவிடாதே!
அதன் பின்னே
என் உள்ளம்
சிந்திக்க துவங்கும்!

ஓய்வு!

மானே! உன்னை
பார்த்து பார்த்து
பூத்த கண்கள்,
சற்றாவது
இமைகளுக்கு
ஓய்வு கொடுக்க
மரண ஓலமிடுகிறது!

உன்னை சுற்றி சுற்றி
வந்த கால்கள்,
கடுமையாய்
சோர்வடைந்து,
ஒருபோதும்
நகர மறுக்கிறது!

உனக்கு மடல் வரைந்து
நொந்த கைகள்,
எனது எழுதுகோலை
தீண்ட மறுக்கிறது!

ஆனால்...
என் மனம் மட்டும்
உன்னைவிட வேகமாய்
ஓய்வில்லாமல் சிந்தித்து,
என் காதலை
பறை சாற்றிகொண்டே
இருக்கிறது!

அடி பெண்ணே!
என் மனதையும்
சோர்வடைய
செய்துவிடாதே!

Saturday, 9 February 2013

தாகம்!

மயிலே!
தனி ஒரு சிலையாய்
உனை நிறுத்தி,
உன் பளிச்சிடும்
மேனிக்கு
சந்தனம் பூசி,

மயக்கிடும் மயிலாம்
உனக்காக- என்னை
மயங்க வைத்த
விழியின் நீரை
பன்னீராய் தெளித்து,

துளிர்த்திடும் அரும்பாம்
என் காதலை
பதித்திடும் வகையில்,
உன் தழைத்திடும்
கூந்தலுக்கு
மலராய் சூட்டி,

துடித்திடும் என் கரங்கள்
சோர்ந்திடும் வகையில்
உனை ஆரத்தழுவி,
தவித்திடும் உன் உதட்டை
கடித்திட தாகம்!
இதுதான் என் மோகம்!


சிலந்தி வலை!

அடியே!
உன் நிழலால்
நிம்மதி இழந்தேன்!

உன் அழகால்
அமைதி குலைந்தேன்!

உன் சிரித்த முகத்தால்
சிந்தனை பல செய்தேன்!

சிப்பிக்குள் முத்தாய்
உனை எண்ணி,
காதலென்னும் ஆழ்கடலில்
அவசரமாய் நான் குதித்தேன்!

சிலந்திவலை விரித்து நீ...
எனை பிடித்த மாயம்,
என்னால் சிக்கவும்
முடியவில்லை!
சிந்திக்கவும் முடியவில்லை!

கண்ணே!
உன் காதல் வலையை
செப்பனிட்டு வை!
நான் மீண்டும் குதிக்க
தயாராயிருக்கிறேன்!

Friday, 8 February 2013

மங்கையின் கா(த)ல்கள்!

மையல்கொண்ட மேனி
மருவி பார்த்தேன்,
மசியவில்லை என் மனம்!

மயங்கும் விழி பார்த்தேன்
கனியவில்லை என் மனம்!

வில்லமை நெற்றியில்
நெகிழ்ச்சியில்லை!

செவ்வரளி இதழில்
இனிமையில்லை என்னில்!

இடைவெளியிட்ட
மலை பார்த்தேன்,
மயங்கவில்லை!

ஒயிலான இடை பார்த்தேன்
இகழ்ந்துவிட்டேன்!

தொடை பார்க்க
கிடைக்கவில்லை,
தொலையட்டும்!

மத்தளமொத்த
பின்னசைவு கண்டேன்,
சலித்துவிட்டேன்!

முட்டிக்கும் கீழ்
கணுக்கால் கண்டேன்
கலங்கிவிட்டேன்!

மாம்பழமாய் தசை
கண்டேன் பின்காலில்
கடிக்கவில்லை!

படமெடு நாகமாய்
பளிச்சிடும் பாதம்
கண்டேன்!
முத்தமிட்டேன்!

கண்ணாடியாம்
கால்விரல் நகம் கண்டேன்,
காதல் கொண்டேன்!

Thursday, 7 February 2013

களியாட்டம்!

ஏய்!
மெதுவாய் ஆடு!
என் இதயம்
நசுங்கிவிடப் போகிறது!

என் இதயத்தில்
நீ போடும் களியாட்டம்
என் இரவு நேர சல்லாபம்!

களிப்புடன்
நீ செய்யும் லீலைகள்
என் நெஞ்ச அரங்கின்
அரங்கேற்றம்!

ஓ! இது கனவா?
என் இதயம்
பிழைத்துக்கொண்டது!

மீண்டும்
உன்னைப்பற்றி
சிந்திக்க தொடங்கும்!

மறைக்க முடியுமா?

நிலவினை மறைக்க
பூமியின் நிழலுண்டு!

கதிரவனை மறைக்க
கார்முகில் மேகமுண்டு!

இயற்கையை மறைக்க
கருவண்ண இருளுண்டு!

இதயத்தை மறைக்க
மாபெரும் உடலுண்டு!

இதயத்தில் இருக்கும்
உனை மறைக்க யாருண்டு?

கண்ணே! காதலுக்கு
கரையுமில்லை!

அதனை மறைக்க
திரையுமில்லை!

வேடப் பத்தினிகள்!

பெண்ணே!
உனை பார்க்க
செக்கிலிட்ட
எருதுவாய்,
சுற்றி சுற்றி
வந்தாலும்,
நீயோ...
மின்னி மறையும்
வின் மீனாய்...

கன நேரம்
என்மனதில்
குடிகொண்டு,
மறு நேரம்
மற்றானுக்கு,
மாயமாய்
மாற்றுகிறாய்
உன் மனதை!

இதயத்தை
வாடகைக்கு விட்டு,
காதலை விலையாய்
பெறும் பெண்ணிணமே!

அய்வருக்கு
ஒருத்தியாய்,
அழியாத
பத்தினியாய்,
விளங்கிய
பாஞ்சாலியும்
பத்தினியில்லை!

ஒருவனிடம்
ஒரு நிமிடம்
வாழ்ந்துவிட்டு,
மறு நிமிடம்
மாற்றான் தேடும்
நீங்களும்
பத்தினியில்லை!

பாழும் மனதை
பறிகொடுத்து,
பாதியிலே
சென்றுவிடும்
ஆண்கள்தான்...
உண்மையில்
பத்தினிகள்!

நீங்களோ...
காதலை நஞ்சாக்கி
கண்டவனுக்கும்
கொடுத்துவிட்டு,
ஆண்களின்
இறுதிச்சடங்கில்,
குளிர் காயும்
வேடப்பத்தினிகள்!
ஓ! பெண்கள்!
வேடப்பத்தினிகள்!

Wednesday, 6 February 2013

அரக்கன்!

என் மன ஓசையிலே!
தாலாட்டு நான் பாட,
தப்பாத தாளமாய்
என் இதயம்
இசையமைக்க!

சிவந்த
உன் சின்ன உதடு,
சிரித்திட்ட ஓசை
கேட்டு,
ஓ! என்ற அலறல்
கேட்டேன்!
அது எங்கிருந்து
வந்தது?

அந்த மாபெரும்
அரக்கன்,
உள்ளத்தில்
கிறுக்கன்!
கள்ளத்தில்
காதலை,
களைத்தெறிய
துடித்திட்டான்
போலும்!

கவலைவிடு
கண்ணே!
எந்நாளும்
என் தாலாட்டு
உன் உள்ளத்தில்
ஊஞ்சலாட்டும்
உன்னை!
நிம்மதியாய்
நீயுறங்கு!


என் மனம் உனக்காக!

விடியலில் வரும்
சூரியன்!
இரவினில் இனிக்கும்
சந்திரன்!
காரினில் துளிர்க்கும்
மேகங்கள்!
புவிபரப்பினில் விளிக்கும்
இயற்கைகள்!
இவையாவும் எந்நாளும்
மாறாது!

என் காதல்...
அதுகூட அன்பினை
அள்ளி வழங்க,
தவறாது எந்நாளும்!

ஓ! பெண்ணே!
என் மனம் நிச்சயமாய்
மாறாது!
எப்போதும் உனக்காக
காத்திருக்கும்!
துணிவுகொள்!!


அன்புமிக்க நண்பர்களுக்கு அதிக அளவு என் கவிதைகளை படித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி! உங்கள் எண்ணங்களை எனக்கு அடிக்கடி தெரியப்படுத்தி
என்னை ஊக்கப்படுத்துங்கள்!
                                                                                       என்றும் அன்புடன்,
                                                                                கோவி. சண்முகசுந்தரம்.

Tuesday, 5 February 2013

காப்பவர்க்கு கிட்டாது!

பாடுபட்டுழைத்து
சேர்த்து வைக்கும்
தேனோ...
தேனீக்கு கிடைக்காது!
அது வேடனுக்கே
கிட்டும்!

தாமரையின் தேனை
குள வாழ் தவளை
உண்ணாமல்,
எங்கிருந்தோ வரும்
வண்டுதானே
சுவைக்கும்!

தன் ஈன்ற கன்றுக்கு
சுரக்கும் ஆவின் பாலை
தனி மனிதன்தானே
தட்டிப்பறித்து,
தன் மகவுடன்
சுவைக்கிறான்?

கட்டுக்குள்
வைக்கும் பொருள்
காப்பவர்க்கு கிட்டாது
ஒருபோதும்!

ஓ! என் இதயம்!
அதனை கட்டுக்குள்
வைத்திருந்தேன்,
அவளோ! ஓடிவந்து
தட்டிப் பறித்துவிட்டாள்!

Monday, 4 February 2013

எதிர்பார்ப்புகள்!

நாயிடம் நன்றி!
கழுதையிடம் சுமை!
புலியிடம் கோபம்!
சிங்கத்திடம் சீற்றம்!
மானிடம் மருட்சி!
வண்டிடம் ரீங்காரம்!

குயிலின் கூவல்!
மயிலின் ஆடல்!
பெண்களின் அடக்கம்!
ஆண்களின் வீரம்!
இவற்றையெல்லாம்
எதிர்பார்ப்பவர்கள்...

காதலை மட்டும்
ஒதுக்குவதேன்!
காதலின் அருமை
கயவர்களுக்கா
தெரியும்?

அழகு!

நெற்றியில் பொட்டு,
கம்மலில் கனிவு,
மூக்குத்தியில் முத்து,
செவ்வுதட்டில் சாயம்,
கழுத்தில் கவர்ச்சிமிகு
ஆபரணங்கள்,
இடுப்பில் ஒட்டியானம்,
கால்கலில் கொலுசு,
இதுவெல்லாம்
அழகா உனக்கு?
இல்லவே இல்லை!

கண்ணே ஓடிவா!
உன்னை
என் இதயத்தில்
அலங்கரித்திருக்கிறேன்!
அதுவல்லவா அழகு!
எனக்கு,
நீ மட்டும்தான் அழகு!

நெஞ்சில் ஒரு முள்!

நெருஞ்சி முள்
நெருடிய
என் கால்களில்,
ஏனோ!
வலியே
தெரியவில்லை!

நெஞ்சில்
ஒரு முள்ளாய்,
என் மன அரங்கில்
உன்னை
பூட்டிவிட்ட
மாயமோ?

கண்ணே!
நீ கொடுத்த
துன்ப மிகுதியால்,
உன் காதல்
நெருடலினால்,
நெருஞ்சி முள்ளின்
வலிகூட,
இலகுவாய்
போய்விட்டதடி
எனக்கு!

உன் காதல்
எனக்கு வலியல்ல,
நெஞ்சில் சுட்ட வடு!


ஏவுகனைகள்!

துடிக்கும்
நெஞ்சங்கள்
துன்பப்படுகின்றன!

தூய நிலவே!
முழுமையாய்
உனைக்காண,
இன்னும்
மாதத்தில்,
பாதி நாட்களா
காத்திருக்க
வேண்டும்?

வேண்டாம்...
உடனே
உனைக்கண்டு,
சோகம் பரிமாற...

ஏவுகனைகள்
எனக்காக
காத்திருக்கின்றன!
இதோ பறந்து
வருகிறேன்
உன்னிடம்!

என்ன உயரும்!

சீருயரும்
சிறப்புயரும்,
சிந்தனையும்
உயரும்!

செவிகளில்
இசையுயரும்!
வாழ்வில்
இன்பமுயரும்!
தோள்களில்
தினவுவுயரும்!

பெண்ணென்றால்
சிறப்புமுயரும்!
புனித காதலென்றால்
என்ன உயரும்?
கண்களில்
கண்ணீர்தான்
உயரும்!