Sunday, 30 June 2013

திணிக்காதே... (பகுத்தறிவு)

பிறக்கின்ற
குழந்தைக்கு
எந்த மதமும்
சொந்தமில்லை!


நெற்றியில் பட்டை
வைணவ நாமம்
ஏசுவின் சிலுவை
அல்லாவின் பிறை
எதுவும்...
இருப்பதில்லை!


கடவுளைப் பற்றி
சாதியைப் பற்றி
மதத்தைப் பற்றி
இனத்தைப் பற்றி
எதுவும்...
தெரிவதில்லை!


எந்த பதிவும்
சொந்தமாக்கப்படாத,
புத்தம் புது கணினியாய்,
நாத்திகனாய்...
பிறக்கும் குழந்தைக்கு,
ஏன் திணிக்கின்றாய்
சாதியை, மதத்தை
கடவுளை?


மனிதனே!
தேவையற்ற
மூட நம்பிக்கையை
திணிக்காமல்
இருந்துபார்!
பகுத்தறிவு வளர்!

உன்குழந்தை
இந்த உலகத்திற்கு
சொந்தம்!
உலகமே
உன் குழந்தைக்கு
சொந்தம்!


Saturday, 29 June 2013

கல்லறை... காதல்...

சிரிப்புகள் கண்டு
மகிழ்ச்சி கொண்டால்
சிந்தனைக்கு
வேலையில்லை!

சோகத்திற்கு பின்
பரிசு தந்தால்,
சுகம் தரும் இன்பம்
மயங்கி நிற்கும்!

உறவுகளின் ஓரத்தில்
உறங்க வந்தால்,
விரிவு செய்ய
சின்னஞ்சிறு
தடுப்பு சுவர்!


கனவுகள்!
கவிதைகளின்
கலக்கங்கள்...
உறங்க
முயற்சிக்கிறேன்!

உன் உருவம்
மறையுமோ
என்ற அச்சத்தால்,
விழித்தே இருக்கிறேன்!

அவளின் உருவத்தை
ரசிக்கிறேன்...
நெருக்கத்தை
தவிற்கிறேன்!

அவளின் கொடிய
வார்த்தைகளால்...
நான் இறக்கிறேன்!

என் கல்லறை
இனிமேல்
காதல் செய்யும்!

Friday, 28 June 2013

பரிதவிக்க விட்டுட்டியே... (கிராமிய நடை)

பாக்கு மரம்
வளத்தேன்
ஆச மச்சான்
நான் உனக்கு,
பாக்கும் வக்கலியே
பரிசமும் நீ
போடலியே!

தேக்கு மரம்
வளத்தேன்
கட்டில் செஞ்சி
அழகு பாக்க,
கண்ணாலமும்
கட்டலியே
கட்டிலுக்கும்
மரம் வெட்டலியே!

ஒதியன் மரம்
வளத்தேன்
அரசானி கால்
வைக்க,
ஆசமச்சான்
நீ ஒடிவந்து
கையும் பிடிக்கலியே
ஒதியனும்
வெட்டலியே!


மல்லிகப்பூ
தோட்டத்தில
மல்லிகப்பூ
பூத்திருச்சி,
ரோசாப்பூவெல்லாம்
மாலை கட்ட
காத்திருக்கு,
ஆச மச்சான்
உன்ன எண்ணி
ராவெல்லாம்
துங்கலியே!

அரளி மரம்
வச்சிருக்கேன்,
அரளி விதை
காய்ச்சிருக்கு,
ஆசமச்சான்
என்ன நீயும்
பரிதவிக்க விட்டுட்டியே!

பழசெல்லாம்
நான் மறக்கலியே
ஆசமச்சான்
உன்னை நெனைச்சி,
அரளி விதை
இனிக்குதைய்யா,
என் உசிறு
உன்ன நெனைக்குதய்யா!

Thursday, 27 June 2013

பெரியவளாய்.... (கிராமிய நடை)

சீவி முடிக்காத
சிக்குத் தலை!
தேய்த்து கழுவாத
வாடிய முகம்!

உலர்ந்த உதடுகள்
துடிதுடிக்க
ஓடி வந்த
அந்த செல்ல
பேத்தி...


பாட்டியின்
சீலைக்கிடையில்
சிக்கி கொண்டு
விம்மி விம்மி
அழுதாள்!

முகம் நிமிர்த்தி
பார்த்த பாட்டி
சிரித்து கொண்டே
சொன்னாள்...
பெரியவளாய்
ஆன பின்னே
அழலாமா?


Wednesday, 26 June 2013

அவன்தான்...(பகுத்தறிவு)

அந்த பேருந்து
தடுமாறி
தடம் மாறியது!

பயணிகள்
அனைவரும்
பயந்து நடுங்கினர்!
அய்யோ கடவுளே
காப்பாற்று! என்று
கதறினர்!


ஓட்டுநரோ
மிகவும் துடிப்பாய்
ஒடித்து, நெளித்து,
மிதித்து...
ஒரு மரத்தில்
மோதி,
அனைவரையும்
காப்பாற்றி விட்டு,
குதித்து
இறந்தார்!

உயிர் பிழைத்த
மக்களே!
உங்கள்
உயிர் காக்க...
உயிர்விட்ட
அவன் தான்
கடவுள்!

Tuesday, 25 June 2013

சுமை குறைப்பு! (பகுத்தறிவு)

மூர்க்கத்தனமாய்
ஓவென்று சத்தம்!

தலைவிரித்தாடினாள்
எல்லை புரத்து
சாமியாய்!

அம்மனிடம்
குறை கேட்க
சுற்றிலும்
ஆயிரம் பேர்!


அவளின்
முக்கல்கள்,
முனகல்கள்
எல்லாம்...
அவளை
கட்டுக்குள்
வைத்திருந்த
கட்டுப்பாடுகள்!

மெய் மறந்து
பேயாட்டம்
ஆடினாள்!
காட்டுப்பாடற்று
அய்ந்து நிமிடம்
உளறினாள்!

ஒன்றுமறியா
அந்த கிராமத்து
பெண்ணுக்கு
கிடைத்த
இடைக்கால
மனச்சுமை
குறைப்பு

குறைக் கேட்கும்
முன்பே
எல்லைபுரத்து
அம்மன் ...
மலை ஏறியது!

Monday, 24 June 2013

அலை பரவ தடை!

வெட்கத்தின்
இடையில்
அவளின்
சின்ன சிரிப்பு!

கன்னக்கதுப்பில்
கை புதைத்து
வண்ணக்கனவுகள்!

அவளின்
எண்ண
அலைகளை
சுரம் மீட்ட
தடங்கல்கள்!

அவளின்
ஊமை நெஞ்சுக்குள்
ஏற்பட்ட ஓலங்கள்!


அவளின்
இனியக்குரலை
நான் கேட்க
தடங்கல்கள்!

அவளின்
எண்ணத் துணிவுகள்
இனிமேல் அவளை
துன்புறுத்தும்!

அவளுக்கு...
இனிமேல்
சிரிப்பு வரும்!
வாய்விட்டு
பேச வரும்!
அன்பு செய்ய
துணிவு வரும்!

ஆம்! அவள்...
இனிமேல்
பெண்மையை
பறை சாற்றுவாள்
காதலால்!

இடையூறுகள்!

உல்லாச
ஊஞ்சலுக்கு
அவசரமாய்
அடித்த
அசுரக்காற்று!


திரை மறைவு
நாடகத்தை
சவப்பெட்டியில்
அடக்குவதற்கு
கடும் போட்டி!

உச்சிக்கு
சென்ற பின்னும்
தானாக வந்த
சறுக்கல்!


உறவுகளை
மதித்ததால்
உண்மைக்கு
கிடைத்த
அவமானம்!

அழுதவன்
சிரிப்பதற்கும்,
சிரித்தவன்
அழுவதற்கும்
கொடுக்கப்பட்ட
திடீர் கட்டளை!


கட்டிய கோட்டை
வாசலில்,
ஆர்ப்பாட்டம்
செய்யும்
சிங்கம்!

இனிமை பரப்பும்
பூஞ்சோலையில்
ஏகமாய் தழுவிய
கெட்ட நாற்றம்!


வலை விரித்து
சூழ்ந்த பின்னே
மீன்களுக்குள்
ஏற்பட்ட
மனச்சிக்கல்கள்!

கடுஞ்சினத்துக்கு
எதிராய்
திடீரென்று
உருவாகிய
சிரிப்பு!
இடையூறுகள்!

ஞானி...

ஊன்றுகோல்
இல்லாத
உண்மை வாழ்வு!

உணர்வில்லாத
நடைமுறையின்
தேர்வு!

எதிர் நீச்சல்
ஏங்கி தவிக்கும்
ஏகாந்தம்!

உருவங்களுக்கு
கிடைத்த
நடைமுறை
மாற்றம்...
தறிகெட்ட
காதல்!


காயங்களுக்குள்ளும்
புது சுகம்...
அவள் பிரிவின்
சோகம்!

அவள்...
சில நாளாய்
என் மனதுக்குள்
இடம் பிடிக்க
துடித்த மாது!

நான்...
எற்றுக்கொள்ள
மறுத்த பின்
விலை மாது!
ஏன்?

அவளின்
உணர்வுகளுக்கு
நான் எட்டவில்லை!
அவளின்
உள்ளத்தடுமாற்றம்
இன்று அவள்...
நடுவீதியில்!

பலருக்கு
இரையான
தசைக்குள்ளும்
ஒரு நல்ல மனம்!

இன்னமும்
அவளின் காதல்
எல்லைக்குள்...
நான்!

சிந்தித்தால்...
அவள் ஞானி!


Sunday, 23 June 2013

மீண்டும் வசந்தம்!

தனித் திரு
வசந்த மண்டபத்தில்
நானும் அவளும்!

அழகு பவனி
சுற்றி வர
அருகருகே
அமர்ந்து,
கூடி குலாவி,
கொஞ்சி பேசிய
நேரமெல்லாம்
நொடிப்பொழுதில்,
மின்னல் போல்
மறைந்ததுவே!


வசந்த காலத்து
தென்றல் காற்று
மீண்டும்...
வீசும் நாள்
எப்போது?

மீண்டும் வசந்தம்
வீசட்டும்!
அவளின் வரவுக்காக
காத்திருப்பேன்
காதலால்!

Saturday, 22 June 2013

சோகம் போகுமா?

மயங்கும்
விழிகளில்
தேங்கிய
கண்ணீர்...
துளி!

நான்
அவளுக்கு
சிந்திய
ஆனந்த
கண்ணீர்!


என் கண்ணீர்
துளிகள்...
அவளின்
உருகாத
இதயத்தில்
உள் நுழைந்து,
அனந்த ராகம்
இசைக்கட்டும்!

அதன் பின்
அவளின்
சோகங்கள்
மறையட்டும்!

Friday, 21 June 2013

அணைக்க துடிக்கும்...

அணைக்க
துடிக்கும்
அகல் விளக்கு
அவள்!

அவசரமாய்
ஓடிச்சென்றால்...
காற்றில்
அணைந்துவிடுவாள்!


அணைக்காமல்
விட்டுவிட்டால்...
அவளின்
நெஞ்சத்து
எரிபொருள்
சிந்தித்து
சிந்தித்து,
காதல் தீபம்
தானாய்
அழிந்துவிடும்!

நெருங்கவும்
முடியவில்லை,
விலகவும்
தெரியவில்லை!

காத்திருக்கிறேன்
அவளின்
அணைப்புக்காக!

Thursday, 20 June 2013

எட்டாத கனிகள்!

பழத்தோட்டத்திற்கு
விரும்பி சென்றேன்,
கனி பறிக்க!


எட்டி எட்டி
பார்த்தாலும்
எட்டாத கனியை
விட்டுவிட,
நான் என்ன
தடுமாறும்
நரியா?


மனித சக்திக்கு
உயர்வாய்
தோன்றும்
காதல் கனையை
நொடிப்பொழுதில்
அனுப்பி,
அக்கனியை
எனதாக்கி
கொள்வேன்
நிச்சயமாய்!

Wednesday, 19 June 2013

தென்றலின் புலம்பல்!

இனிமை தரும்
தென்றலுக்கு
இசைவது போல்,
அந்த இனிய மலர்
அசைகிறது!

மலரின் நிறமோ
மயங்க வைக்கிறது!
சிறிது சிறிதாய்
தென்றலின்
உணர்ச்சியோ
ததும்புகிறது!


ஆயினும்...
உண்மை
பரிமாற்றத்திற்கு,
கால தாமதம் ஏன்?

பூவே இனியும்
என்னை நீயும்
உன்னை நானும்
தனிமை படுத்த
தேவையில்லை!

இதோ...
புயலாய்
வருகிறேன்!
உன் சின்ன
இதழ்களை
சிறைப்பிடிக்க!

Tuesday, 18 June 2013

காதலை கட்டவிழ்த்துவிடு!

கரையை
அலை உரசுவதால்
கரை அழிய
போவதில்லை!


கதிரவனின்
சீற்றத்தால்
அழகு முகங்கள்
அழிவதில்லை!

நிழல்களின்
தடுமாற்றங்கள்
வெளிச்சம்
வரும் வரைதான்!

அற்புத ஒளி
ஏங்கி நிற்க...
பொய்யான
இருள் எதற்கு?


மனங்களின்
உரசல்கள்
வாழ்வில்
இனிமையையே
தரும்!

பூடிவைத்த
இன்பத்தை,
இனிய காதலை
கட்டவிழ்த்துவிடு!

எனது இனிய
இதயம்...
காத்திருக்கிறது
உனக்காக!

Monday, 17 June 2013

பகலுக்கும் பிடிக்கவில்லை!

சொல்லிய
சொல்லுக்கு
காத்திருந்த
வேளை!

சுரமில்லாத,
இனிமையில்லாத
தனிமையின்
கொடுமை!


கொஞ்சி,
குலாவி,
கூறுபோட
நினைத்தால்...
அவள் என்னிடம்
இல்லை!

தனிமையின்
முனகல்
பகலுக்கும்
பிடிக்கவில்லை!

அதோ இருள்!
நான்...
அங்கு சென்றாவது
அவளை
தேடுகிறேன்!

திணறிய அவள்!


நான் வடித்த
கவிதையை
படிக்க ...
திணறிய அவள்!

கருத்துக்களின்
ஆழத்தை
விளக்கியபின்
ரசிக்கிறாள்!


வாழ்வில்
மட்டுமே
முரண்பாடாய்
இருந்த எனக்கு,
என் கவிதைகளும்
முரண்பட்டதோ?

இனிமை கருத்தை
உள்ளடக்கிய,
அவளுக்கு புரியாத,
என் இனிய
கவிதையே!
நீ...
எனக்கு மட்டும்
சொந்தம்!

Sunday, 16 June 2013

துன்பத்தை இன்பமாக்கு!

உன்னை
நான் படுத்திய
பாடெல்லாம்,
உன் மனதில்
பட்டியலிட்டு
பார்!


உன் உடலில்
ஓடும்
ஒவ்வொரு துளி
இரத்தமும்,
இன்ப உணர்ச்சியில்
கொப்பளித்து
நிற்கும்!
காதல் பாதையில்
கரை புரண்டு
ஓடும்!

அடியே!
இன்பத்தை
துன்பமாக்காதே!
துன்பத்தை
இன்பமாக்கு!

Saturday, 15 June 2013

மாறிவிட்டான்!

உணர்ச்சிக்கு
தீனி போட்டவன்
ஊறுகாயாய்
மாறி போனான்!

அவனை
தொட்டுக்கொள்ள
ஆசைப் பட்டாள்!
அவனோ...
அடுத்தவளின்
பசிக்கு இரையாகி
போனான்!


இருட்டு
அறைக்குள்ளே
இதய தீபம்
ஏற்றிவிட்டாள்!

அறைக்குள்
ஒளிவிளக்கு
அனைவர்க்கும்
உதவாது!
அது அன்புக்கும்
வழி விடாது!

அடி பெண்ணே!
உன்னை
நல்லவனுக்கு
இளைப்பாறு!
அன்பை...
அன்புடன்
மோது!

இருள் பயணம்!

புல்லாங்குழல்
இல்லாமலேயே
புதுப்பாட்டு!

உருவம்
இல்லாமலேயே
உணர்ச்சி சித்திரம்!

உறவுகள்
இல்லாமலேயே
பரிதவிப்பு!


சித்திரப்புலியை
பார்த்து
திடீர் பயம்!

அரங்கேறா
நாடகத்துக்கு
போட்ட
பொய் வேடம்!

நெருப்பு என்ற
வார்த்தையில்
ஏற்பட்ட தீப்புண்!

வெளிச்சமில்லா
வழிக்குள்ளே
அவளின் வாழ்க்கை
பயணம்!

அவளின்
தடுமாற்றங்கள்!

Friday, 14 June 2013

பிடிக்கவில்லை!

பட்டப்பகல்
சூரியனை
நீ...
சின்னத் தாவனி
கொண்டு
மறைப்பது
பிடிக்கவில்லை!

வெட்ட வெளி
காதலை
நீ...
உள்ளே
மூடி மறைப்பது
பிடிக்கவில்லை!

உள்ளம் பேசும்
உண்மையை
நீ...
பொய் கொண்டு
மறைப்பது
பிடிக்கவில்லை!


கள்ளமில்லா
பார்வையை
நீ...
திரை போட்டு
மறைப்பது
பிடிக்கவில்லை!

உணர்ச்சியின்
பரிதவிப்பை
நீ...
கோபம் கொண்டு
மறைப்பது
பிடிக்கவில்லை!

என்னவளாய்
மாறியும்
நீ...
புதைகுழியில்
உன் நெஞ்சம்
புதைப்பது
பிடிக்கவில்லை!


கவிதைக்கு தலைப்பு!

கவிதை
காண்பித்தேன்,
அவளுக்கு
கசந்தது!

கவிதை
கேட்கிறாள்...
எனக்கு
இனிக்கிறது!

இனிமை
கவிதைக்கு
இறுமாப்பு!


சோகக்
கவிதைக்கு...
இடைக்காலத்தடை!

அவள் சிரிப்பில்,
கண் சிமிட்டலில்,
இதமான அணைப்பில்,
ஆயிரம் ஆயிரம்
தமிழ் சொற்களின்
துள்ளல்கள்!

இதோ...
தேனான
இனிமைக் கவிதைக்கு,
தலைப்பிடுகிறேன்!
”காதல்”!

Thursday, 13 June 2013

பூவை பறிக்காமல்...

அதோ
அந்த பூவை
தொடாமல்
ரசித்தேன்,
பூவின் வாசம்
இனித்தது!

தொட்டு
ரசித்தேன்,
பூவின் மென்மை
இனித்தது!

என் மனதுக்குள்
நிலை நிறுத்தி
ரசித்தேன்,
பூவின் அழகு
இனித்தது!


அருகில் சென்று
இதழ் பதித்தேன்,
பூவின் மகரந்தம்
தேனாய் ...
இனித்தது!

தொட்டும்
தொடாமலும்
இனிமை தரும்
அந்தப் பூவை
பறிக்காமல்
காதல் செய்வேன்
எந்நாளும்!

Wednesday, 12 June 2013

கண்மூடி கனிப்புகள்!

சந்தடி சாக்கில்
சரசங்கள்!

சறுக்குகின்ற
வழிகளிலும்
நேர்மை!

உறவுக்கு
ஊன்றிய
அன்பின்
அடித்தளம்!

அடிக்கடி
மின்னி மறையும்
வான் துகள்கள்!


கொஞ்சுகிற
குரலுக்கு
மழலையின்
போதனை!

குவிந்த
சிந்தனையில்
தடையாய்
சில இடைஞ்சல்!

குற்றமில்லா
வாழ்வுக்கு
கிடைத்த
ஏளனங்கள்!

ஏமாற்றத்திற்கு
கிடைத்த
வெற்றிப்பரிசு!

வெடிக்கும்
எரிமலைக்கு
குளிர்ச்சி
எப்போது?

சிந்தித்தேன்...
சிரிக்கிறேன்!

Monday, 10 June 2013

அன்பு செய்... மறந்துவிடு!

மேதினியில்
பெருந்தன்மையாய்
சில மனிதர்கள்!

வாழ்வின்
வலைக்குள்
சிக்கி தவிக்கும்
சின்னஞ்சிறு
மனிதர்கள்
பல பேர்!

அன்பு...
சற்று நேரம்
தாமதித்து
யோசிக்கும்
அவமான
சின்னமாய்!


ஆற்பர்களின்
சிந்தனைக்குள்
அகப்பட்ட
வெகுமானமாய்
அன்பு!

வீணர்களின்
வெட்டிப்பேச்சுக்கு
விலைபோன
மலிவான
பொருளாய்
அன்பு!

வருங்கால
சந்ததிகளுக்கு
அன்பு இல்லை
என்று...
சொல்லித்தர
வேண்டும்!

நான்
இருக்கிறேன்!
என் சாவு
இருக்கிறது!
அதன் பின்
என் உருவ சிலை
இருக்கிறது!

என்னை
பார்த்தாவது
அன்பு செய்து
மறந்து விடுங்கள்!

Sunday, 9 June 2013

இதயம் உன்னிடம்!

அவசரமாய்
எனைத்தழுவி,
ஆசை வார்த்தை
கூறிவிட்டு,
இதயத்தில்
காதல் எனும்
ஆனியை
தைத்துவிட்டு,
சென்றுவிட்டாய்...
நீ எங்கோ?


என் இதய வலி
நீங்கிட...
உன் நினைவுகளை
என் மனத்தில்
போக்கிவிட்டு,
நம் காதல்
கணக்கை
இத்துடன்
முடித்துவிடு!
இனியாவது
என் இதயம்
இளைப்பாறட்டும்!

Saturday, 8 June 2013

புத்துணர்ச்சி!

ஊமைக்கு
கிடைத்த
திடீர் பேச்சு!

செக்குமாட்டுக்கு
கிடைத்த
நேர் வழி!

உருவமற்ற
கிருக்கல்களுக்கு
கிடைத்த
புது வடிவம்!


அழகு செய்ய
தவறியவனுக்கு
தானாய் கிடைத்த
அழகு!

ஆழமே இல்லாத
கடலுக்குள்
கண்டெடுத்த
முத்து சிப்பி!

உணர்ச்சியற்ற
என் உடலில்
புத்துணர்ச்சி...
அவளிடம்
காதல்!

பச்சை ரோசா?

வசந்தம் வீச
வண்ண வண்ண
மலராய்...
காட்சி தந்தேன்!

காதலரின்
கைகளில்
சிக்கியும்
தவித்தேன்!


காதலையும்
என்னையும்
தொடர்பு படுத்தும்
இவ்வுலகம்,
வெற்றி பெற்றால்
என் வாசத்தை
போற்றும்!

தோல்வி என்றால்
என் காம்பில் உள்ள
முள்ளை தூற்றும்!

இலைகளை பற்றி
புகழ்வார் இல்லை!
நானும் பச்சையாக
மாறிவிட்டால்...
காதலுக்கு நான்
தேவையில்லை!

Friday, 7 June 2013

இருளுக்கு ஒரு அவசர ஒளி!

ஊறித்தவித்த
உன்னத
நினைவுகளுக்கு,
அதோ அந்த
புது மயிலின்
சாரல் மழை!

பழைய
சோகங்களுக்கு
அவசரமாய்
கொடுத்த விடை!

வாடிய மலருக்கு
இதயத்தில்
நான் கொடுத்த
புத்தம்புது வாசம்!


புதுப் புனலில்
சீற்றத்தில்
ஏற்பட்ட
சினஞ்சிறு
சோலை!

மீண்டும் மீண்டும்
காதல்...
இதய இருளுக்கு
புதிதாய் கிடைத்த
இடைக்கால ஒளி!

அணையும் வரை
எரியட்டும்!
இதயம்...
சற்று நேரம்
ஒளி பெரட்டும்!

மோகத் தீயாய்!

உருவ மோகத்திற்கு
ஏற்றி வைத்த
கடைசித் தீ!

ஊசலாடும்
உல்லாச
தவிப்புகளுக்கு
முற்றுப்புள்ளி!

உண்மைக்கு
வைக்கப்பட்ட
சிறப்பு பேட்டி!


நெஞ்சத்தீக்கு
உருவாக்கிய
தீயணைப்பு படை!

ஊக்கத்திற்கு
கொடுத்த
சிறிய தடை!

அவளின் மோகங்கள்...
எனது இறுதிச்சடங்கின்
தீப்பிழம்புகள்!

Thursday, 6 June 2013

சோகமும் சுகமும்!

சோகங்களுக்குள்ளும்
சுக இராகங்கள்!
திணறி திணறி
தத்தளித்த அவளின்
நினைவுகளுக்கு,
நான் இசைத்த
புதுராகம்!


ஓ...
நான் மெட்டுக் கட்டி
பரிதவிப்பாய் தந்த
அவளின் சோகம்
காற்றாய் மறைந்து,
அவள் இதயத்தை
வருடியதோ?


அசுர வேகத்தில்
மீண்டும் காற்று
எனை நோக்கி!
அவள் களிப்புடன்
தந்த புதுராகம்,
என் உணர்ச்சிக்கு
கிடைத்த எதிர்ப்பு!
புதிய காதலுக்கோர்
பூந்தளிர்!

என் சோகத்திற்கு
சுகம் தர துடிக்கும்
புதியவள்?

Wednesday, 5 June 2013

இறக்கும்வரை ஏகாந்தம்!

என்னை
திணற வைத்த
மூக்கணாங்கயிற்றுக்கு
என் மனம் விடுத்த
சவால்!

எனக்குள்ளே
புது வேகம்!
இடை இடையே
சோகங்களின்
முட்டுக்கட்டை!

மனித சக்திக்கு
ஏற்பட்ட
மாபெரும்
சோதனை!

அவளை...
உதறத்துடித்த
என் இதயம்
ஏமாறவா
போகிறது?

ஆம்...
இன்னமும்
எவளிடமோ,
சிறைபடத்தான்
போகிறது!

இதய
ஏகாந்தத்திற்கு
முடிவு...?
இறந்த பின்னாவது
கிடைக்கட்டும்!

Tuesday, 4 June 2013

சாவு மணி!

மயங்கிய
மஞ்சத்தில்,
மனத்தடுமாறல்கள்!

அவளின்
நினைவுகளுக்கு
இறுதி நேர
விடுதலை!

உறங்கிய
பின்னும்
கனவுகளில்
அவளின் ஓலங்கள்!


கானல் வரி பாடி
கடைசியாய்
நான் விடுக்கும்
அவளின் பிரிவுகள்!

உணர்ச்சிக்கு
நான் ஒலித்த
சாவு மணி!

தேவையில்லை
இனிமேல்...
அவள்!

என் இதயப்
பயணத்தில்...
அவளை விடுவிக்க
என் துடிப்புகள்!
விடையாய்
கண்ணீர்த்துளிகள்!

Monday, 3 June 2013

அய்ந்தாம் அறிவு!

கொஞ்சும்
கிளிகள்,
ஆடும்
மயில்கள்,
கூவும்
குயில்கள்,
நடை பயிலும்
அன்னங்கள்!,
மருண்ட
பார்வையில்
மான்கள்,
இவற்றை
அழகு படுத்தி
ரசிக்கும்
மனிதன்...


அவற்றின்
குணங்களை
தனக்குள்ளே
ஏற்க மறுப்பது
ஏன்?


மனித
சிந்தனையின்
விளைவாய்
அய்ந்தாம்
அறிவுக்கு
சிறைவாசம்!
நல்லதை ஏற்க
மறுக்கும்
உயர்வின்
தேம்பல்கள்!
  

எதிர் மறையாய் நட்பு!

குறிப்பறிந்து
சொன்னால்...
குதர்க்கம்!

குனிந்து
நின்றால்...
குட்டு!

மதிப்பறிந்து
நடந்தால்...
அவமானம்!


மனமறிந்து
நடந்தால்...
வெகுமானம்!

உயர்வறிந்து
நடந்தால்...
அலட்சியம்!

ஊரறிந்து
நடந்தால்...
காவல்!

உண்மையறிந்து
நடந்தால்...
மோதல்!
நட்புக்கு
எதிர்கோணம்!

Sunday, 2 June 2013

வெட்டவெளி காதல்!

ஊழ்வினை
பேச்சுக்கும்,
உரு தவறிய
உயிருக்கும்,
உன்னத
தீண்டலுக்கும்,
உச்சி வெய்யில்
வெப்பத்துக்கும்,
தீஞ்சுனை
அருவிக்கும்,
தெவிட்டாத
தேனுக்கும்,

உருகாத
உலைக்கும்,
வேகாத
செம்பொன்னுக்கும்,
புத்தம்புது
பாட்டுக்கும்,
புனைந்த தமிழ்
கவிதைக்கும்,
ஒட்டாத...
உறவாடாத...
வெட்டவெளி
பொய்வேடம்
காதல்!

கேளிக்கை...

சிந்தனையை
அடகு வைத்த
செக்கு மாடுகள்,
சுதந்திரமாய்
திரியும் மனிதனை
பார்த்து...
சிரிக்கின்றன!


உருவத்திற்கு
துடிக்கும்
கூட்டுப்புழுக்கள்,
பறக்கும்
வண்டுகளை
பார்த்து...
சிரிக்கின்றன!


சண்டையிட்டு
திரியும்
திமிர் கொண்ட
எருதுகள்,
கொஞ்சி குலாவும்
பசுக்களை
பார்த்து...
சிரிக்கின்றன!


சிலரின் தவிப்புகள்
பலருக்கு
தெரிவதில்லை!
உணர்ச்சிகள்...
ஏளனப்படுத்த
படுகின்றன!
இயற்கையின்
தடுமாற்றம்!

அவளை விட்டுவிட...

உச்சி முகர்ந்து,
உன்னதமாய்
புகழ்ந்து,
உருவத்திற்கு
வியந்து,
உணர்ச்சிக்கு
அடிமைப்பட்டு,
உண்மைக்கு
பயந்து,
உள்ளத்திற்கு
திணறி,
அவளை...
விட்டுவிட
நினைக்கிறேன்!


எனக்காக...
ஒரு புது மலர்,
இனியாவது
வாசம் வீசட்டும்!
என் காதல்
சோலையில்
புதுத்தென்றல்
பரவட்டும்!