Friday, 25 January 2013

இளந்தமிழ் நங்காய்!

இளநங்காய் இறுமாந்து கேட்கிறேன்,
இளந்தமிழ் காதலனாய் உன்னை!
இளவல்கவர் கண்களோ இரட்டைகாப்பியம்!
இசை கழுத்தாரமோ கீழ்கணக்கு!
இடுப்பின் ஒட்டியாணமாய் பத்துப்பாட்டு!
இளமை காற்சிலம்பாய் எட்டுத்தொகை!
இனிகுரலாய் தமிழில் எழுச்சியும்- உன்
இழுமூச்சாய் இயல் இசை நாடகமும்!

வண்டு ஏமாந்து மொய்க்கும்-உன்
வழவழப்பு செவ்வுதடுகளில் தமிழ் பாடல்!
வண்ணக்கால்களை அசைத்தால் -உன்
வடிவழகுக்கு ஒப்பா பரதக்கலை!
வளமிகு உடலைக்கண்டு காதலானேன்,
வளைகரம் பற்றினேன் தமிழால் உன்னை!
வஞ்சி நீ! தமிழகத்தில் மிளிருங்கால்,
வடமூதாட்டி வலைவிரிப்பதா உனக்கு?

கலைமிகு கவியாக்கிய கவிஞர்கள்-உன்
கவியுடை கண்ணால் கவரப்பட்டார்கள்!
கன்னித்தமிழ் காரிகைக்கு காலமெல்லாம்
கவிகாதலர்கள் கடும்பணி செய்வாரே!
காலத்தால் அழியாத உன் இளமை,
கள்ளி அந்த வடமொழியால் அழியுமோ?
கண்ணே தமிழ்பெண்ணே என்றென்றும்,
காலடியில் பணிசெய்வார் தமிழ் காதலர்!

No comments:

Post a Comment